“மலையக மக்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். பெருந்தோட்டப் பகுதியில் காட்டாட்சி நடப்பதை அனுமதிக்க முடியாது, எனவே, கூலிப்படை தேவை இல்லை.” என்று தேயிலை தொழிலாளர் மத்திய நிலையத்தின் இணைப்பாளரும், சட்டத்தரணியுமான சிறிநாத் பெரேரா தெரிவித்தார்.
“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்தை ஆதரித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மலையக மக்களுக்கான நில உரிமை என்ற கோஷம் பல வருடங்களாக எழுப்பட்டுவந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, நில உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கு நாம் நீலகாமம் போராட்டம் வலுசேர்க்கும் என முழுமையாக நம்புகின்றோம்.
தோட்டங்களில் கூலிப்படைகளை வைப்பவர்கள், குளவிக்கூடுகளை கலைப்பதற்கும், தேயிலை தோட்டங்களை சுத்தப்படுத்தி தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு குழுக்களை நியமிக்காமல் இருப்பது ஏன்? குறைந்தபட்சம் சுகாதார சேவை பிரிவொன்றையாவது அமைக்கலாம் அல்லவா?
மலையக தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு நாம் முயற்சித்துவரும் நிலையில், காணி உரிமையை வழங்கி அதற்கான சிறப்பான ஆரம்பத்தை வழங்குவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்.” எனவும் சட்டத்தரணி சிறிநாத் பெரேரா தெரிவித்துள்ளார்.
