துபாயில் நடைபெறவுள்ள இளம் உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இன்று காலை (12) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக துபாய் பயணமானார்.
உலகப் பொருளாதார மன்றமும் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கமும் இணைந்து நடத்தும் முதலாவது உலகளாவிய இளம் உலகத் தலைவர்கள் வருடாந்த மாநாடு, இம்மாதம் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெறவுள்ளது.
அரசு, வணிகம், கல்வித்துறை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த 400 தலைவர்கள் பங்கேற்கும் உலகளாவிய இளம் உலகத் தலைவர்கள் மாநாடு, எதிர்காலத் தலைமுறையினருக்கு இடையிலான ஒத்துழைப்பையும் புதிய சிந்தனைகளையும் மேம்படுத்தும் தளமாக அமையவுள்ளது.
எதிர்காலத்தை நோக்கிய கலந்துரையாடல்கள் மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் மூலம், வளர்ந்து வரும் புதிய போக்குகளை ஆராய்வதுடன், தற்போதைய கருத்துகளையும் அணுகுமுறைகளையும் மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பும் இதன்போது பங்கேற்பாளர்களுக்குக் கிடைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த பத்தாண்டுகளில் உலகை வடிவமைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து நீண்டகால நோக்கில் ஆராய்ந்து, எதிர்காலத்திற்கான புதிய திட்டங்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்குவதற்கும் இம்மாநாடு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.










