அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் நீதிமன்றத் திருத்தச் சட்டம் ஆகியவற்றின் ஊடாக நீதித்துறையின் சுயாதீனத்திற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
மேல் மாகாணத்தின் களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு இன்று (15) முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது:
“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தையும் நீதிமன்றத் திருத்தச் சட்டத்தையும் ஒன்றாக இணைத்தே பார்க்க வேண்டும். 22 ஆவது திருத்தம் உயர்நீதிமன்ற நீதிபதிகளைப் பாதிக்கும் அதேவேளை, நீதிமன்றத் திருத்தச் சட்டமானது நீதவான்கள், மேல்நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளைப் பாதிப்பதாக உள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் போர்வையில் கொண்டுவரப்படும் இச் சட்டமூலங்கள், நீதித்துறையின் சுயாதீனத்திற்கு மரண அடியைக் கொடுப்பதாக அமைந்துள்ளன.
ஜனநாயகத்தின் பிரதான தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு மற்றும் சமநிலைத் தன்மையை 22 ஆவது திருத்தம் முற்றாகச் சீர்குலைக்கின்றது. இதன் மூலம் சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகமும் பலவீனமடைகின்றன.
அத்துடன், 22 ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் இரகசியத் தீர்ப்பு நாடாளுமன்றத்திற்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், ஜனாதிபதிக்கு அத்தீர்ப்பு எவ்வாறு தெரியும் என்ற கேள்வி எழுகின்றது. இத் திருத்தம் மக்கள் இறையாண்மையைப் பாதிக்குமாயின் நாடாளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமாகும். அவ்வாறிருக்க, இதனை நாடாளுமன்றத்தில் மாத்திரம் விரைவாக நிறைவேற்றப்போவதாக ஜனாதிபதி கூறுவது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
நாடு முழுவதிலும் தனிக்கட்சி ஆட்சியை ஸ்தாபிப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். இளைஞர் சேவைகள் மன்றத் தேர்தல்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு நியமனங்கள் என அனைத்தும் பெலவத்தையிலுள்ள கட்சி அலுவலகத்தின் பட்டியலின் படியே இடம்பெறுகின்றன. உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி உதவிகளைப் புறக்கணித்து, அவற்றை நிதியற்ற வெற்று நிறுவனங்களாக மாற்றவும் அரசாங்கம் முற்படுகின்றது.
அதேவேளை, மாகாண சபைத் தேர்தலை மேலும் தாமதப்படுத்துவதற்காகவே அரசாங்கம் தெரிவுக்குழுவை நியமித்ததால் தான் எதிர்க்கட்சிகள் அதிலிருந்து வெளியேறின.
எனவே, அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராகவும், உயர்நீதிமன்றம் உள்ளிட்ட சுயாதீன நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காகவும் எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள அமைதிவழிப் போராட்டத்தில் அனைத்து முற்போக்குச் சக்திகளும் கைகோர்க்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
