ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க, கட்சியில் தான் வகித்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு இது தொடர்பில் அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதற்கமைய கட்சியின் பிரதிச் செயலாளர், குருநாகல் பிரதான அமைப்பாளர், சமகி சேவக சங்கத்தின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவரின் தொழிற்சங்க ஒருங்கிணைப்புச் செயலாளர் மற்றும் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்தே அவர் விலகியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்பட்ட காலம் தொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்ட பின்னரும் தற்போதைய காலம் வரை சஜித் பிரேமதாசுவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தனக்குக் கிடைத்த வாய்ப்பு குறித்து அசோக் அபேசிங்க தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட ஆதரவிற்கும் வாய்ப்புகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், கட்சியின் எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
