ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி தொடக்கம் கொடுத்தார். வைபவ் அரோரா வீசிய 2-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். தொடர்ந்து சுனில் நரைன் வீசிய 3-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விரட்டினார் டிராவிஸ் ஹெட்.
அதேவேளையில் நிதானமாக விளையாடிய அபிஷேக் சர்மா 10 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் கார்த்திக் தியாகி 144 கிலோ மீட்டர் வேகத்தில் பேக் ஆஃப் தி லென்ந்த்தில் வீசிய பந்தை விளாச முயன்ற போது மிட்விக்கெட் திசையில் நின்ற கேமரூன் கிரீனிடம் கேட்ச் ஆனது.
முதல் விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஜோடி 3.4 ஓவர்களில் 44 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இஷான் கிஷன் களறிமிங்கினார். கேமரூன் கிரீன் வீசிய 5-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் அடித்தார். மறுபுறம் கார்த்திக் தியாகி வீசிய 6-வது ஓவரில் இஷான் கிஷன் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் பறக்கவிட்டார். இதனால் பவர்பிளேவில் ஹைதராபாத் அணி 71 ரன்கள் குவித்தது.
வருண் சக்ரவர்த்தி வீசிய 7-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். மட்டையை சுழற்றிய டிராவிஸ் ஹெட் 28 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் விளாசிய நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். டீப் மிட்விக்கெட் திசையில் டிராவிஸ் ஹெட் அடித்த பந்தை கேமரூன் கிரீன் கேட்ச் செய்தார். 2-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் ஜோடி 61 ரன்கள் சேர்த்தது.
இதன் பின்னர் அந்த அணி ஆட்டம் கண்டது. ஹெய்ன்ரிச் கிளாசன் 11 ரன்கள் எடுத்த நிலையில் கேமரூன் கிரீன் வீசிய ஷாட் பிட்ச் பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் விளாசினார்.
அப்போது மின்னல் வேகத்தில் ஓடிவந்த ரோவ்மன் பவல் அந்தரத்தில் பாய்ந்தபடி டைவ் அடித்து கேட்ச் செய்தார். இந்த கேட்ச் வியக்க வைக்கும் வகையில் அமைந்தது.
இதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் சமரன் 4, அனிகேத் வர்மா 6, சலில் அரோரா 2 ரன்களில் நடையை கட்டினர். சீராக விளையாடி வந்த இஷான் கிஷன் 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் பந்தை லாங்க் ஆஃப் திசையில் விளாசிய போது அனுகுல் ராயிடம் கேட்ச் ஆனது.
இதைத் தொடர்ந்து பாட் கம்மின்ஸ் 10, ஷிவங்க் குமார் 1, ஹர்ஷால் படேல் 6 ரன்களில் நடையை கட்டினர். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
