கடந்த பல ஆண்டுகளாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் “கொம்பனித்தெரு குடு நோனா” என்றும் “நோனா அம்மா” என்றும் அழைக்கப்படும் 54 வயதுடைய பெண், ஹெராயின் போதைப்பொருளுடன் கிரிபத்கொடை போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செட்டிகுளம் பகுதியில் உள்ள போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடம் ஒப்படைப்பதற்காக போதைப்பொருளைக் கடத்திச் சென்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதின் போது, விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 50 கிராம் ஹெராயின் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 48 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
முன்னர் கொம்பனித்தெரு மற்றும் கிரிபத்கொடை பகுதிகளில் வசித்து வந்த இவர்மீது ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முன்னதாக, 34 கிராம் ‘ஐஸ்’ (Crystal Meth) போதைப்பொருளைப் வைத்திருந்த குற்றத்திற்காக இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
மேலும், அண்மையில் இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “சூட்டி உக்குங்” என்பவரின் சித்திதான் கைதான இந்த நோனா அம்மா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவரது கணவரான “கும்பிகலே சூட்டி” என்பவரும் போதைப்பொருள் வழக்கில் தண்டனை பெற்று தற்போது விளக்கமறியலில் உள்ளார்.
சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை
நீண்டகாலமாகப் போலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த சந்தேகநபரின் சட்டவிரோதச் சொத்துக்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள் குறித்து கிரிபத்கொடை போலிஸார் சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சொத்துக்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










