6 மாதங்களாகக் கூடாரம்தான் வாழ்க்கை: பாதுகாப்பான இடம் கோரும் தோட்ட மக்கள்!

 

“6 மாதங்களாகக் கூடாரங்களில் வாழ்கின்றோம். அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றோம். எனவே, பாதுகாப்பான இடத்தில் காணி வழங்கி, தற்காலிக வீடுகளையாவது விரைவில் அமைத்துத் தருமாறு கோருகின்றோம்”

இவ்வாறு நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அலகல தோட்டம், 508/B கோணக்கலை பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கூடாரங்களில் வாழும் குடும்பங்கள் மிகத் தாழ்மையுடன் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா இயற்கை பேரிடரால் கோணக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 55 குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, அவர்கள் அருகில் உள்ள பாடசாலையில் சுமார் இரண்டு மாதங்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்தனர்.

இது குறித்து அலகல தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாம் முன்னர் தங்கி இருந்த லயன் குடியிருப்புப் பகுதியை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆய்வு செய்தது. அதன் பின்னர், நிலச்சரிவு அபாயம் காரணமாக 22 குடும்பங்களை அங்கிருந்து நிரந்தரமாக வெளியேறுமாறு எமக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எங்களை வாடகை வீடுகளைத் தேடிச் செல்லுமாறும், அதற்கான வாடகைப் பணத்தை 6 மாதங்களுக்கு அரசாங்கம் வழங்கும் எனவும் கூறப்பட்டது.

எனினும், பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சிலர் வேறு வழியின்றி உறவினர்களின் லயன் குடியிருப்புகளுக்குச் சென்றதால், அவர்களுக்கு இந்த வாடகை உதவித்தொகை மறுக்கப்பட்டுள்ளது.

எமக்கு வேறு வழி இல்லை. தங்குவதற்குப் பாதுகாப்பான இடமின்றி எம்மில் 15 குடும்பங்கள் கடந்த சில மாதங்களாக தற்காலிக கூடாரங்களை அமைத்து, அடிப்படை வசதிகளின்றி மிக மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றோம்” என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தற்காலிக வீடுகளுக்கான கோரிக்கை

பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு முதலாவதாகப் பாதுகாப்பான மாற்று இடமொன்றை (காணி) வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு வழங்கப்படும் இடத்தில், அவசரத் தேவையாக தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுத்தால், அதன் பின்னர் அடுத்தகட்ட ஏற்பாடாகத் தமக்கான நிரந்தர வீடுகளை அமைத்துக் கொள்ள முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காணிகளைப் பெற்றுக்கொள்வதில் அரச அதிகாரிகளுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையே இழுபறி நிலை நீடிப்பதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இது குறித்துப் பேசிய மக்கள், “காணி ஒதுக்கப்பட்டால் வீடுகளை அமைக்கும் பணியை உடனே ஆரம்பிப்போம். ஆனால், காணி பெறுவதில்தான் சிக்கல் உள்ளது என அரச அதிகாரிகள் எம்மிடம் தெரிவித்தனர். எனவே, காணியை வழங்குவதில் தோட்ட நிர்வாகமும் மக்கள் நலன் கருதிச் செயல்பட வேண்டும்” என்றனர்.

மேலும், தமக்குக் காடுகள் நிறைந்த காட்டுப் பகுதியில் இடம் ஒதுக்கத் தோட்ட நிர்வாகம் முற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள மக்கள், “காட்டுப் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டால், அங்கு நாம் எப்படி வாழ்வது? எங்கள் பிள்ளைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் எங்களது வேலைவாய்ப்புகளைக் கருத்திற்கொண்டு, பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லக்கூடிய உகந்த, பாதுகாப்பான இடமொன்றில் எங்களை உடனடியாகக் குடியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

மலையகத்தில் தற்காலிக கூடாரங்களில் வாழும் இந்த 15 குடும்பங்களின் அவல நிலையைப் போக்க, உரிய அதிகாரிகள் மற்றும் தோட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, பாதுகாப்பான காணியை வழங்கி, வாழ்வாதாரத்திற்கான அவசர உதவிகளையும் வழங்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

Related Articles

Latest Articles