ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர் ஒருவர் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவினால் (SIU) கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியிலும், திட்டமிட்டபடி லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 தொடர் இன்று மாலை கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் தொடங்கும் என்று இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நடைபெற்று வரும் இந்த விசாரணை தொடர்பாக விசேட விசாரணைப் பிரிவு (SIU) ஏதேனும் உதவிகளைக் கோரினால், அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தத் தொடருடன் தொடர்புடைய பங்குதாரர்கள் எவரேனும் ஊழல், முறைகேடு மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதை இலங்கை கிரிக்கெட் சபை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது (Zero-tolerance policy) என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், இந்த லீக் தொடரின் நேர்மைத் தன்மையைப் பாதுகாப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்தத் தொடர் மிக உயர்ந்த ஒழுக்க மற்றும் நேர்மைத் தரங்களுடன் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இந்தத் தொடருக்கு முன்னதாக, அதன் ஊழல் தடுப்புப் பிரிவு (Anti-Corruption Unit), விசேட விசாரணைப் பிரிவுடன் (SIU) இணைந்து லீக்கின் ஊழல் தடுப்பு கட்டமைப்பை வலுப்படுத்த நெருக்கமாகப் பணியாற்றியுள்ளது.
இவற்றுடன் கூடுதலாக, போட்டி முழுவதும் சிறப்பு நேர்மை ஆதரவு மற்றும் கல்விசார் விழிப்புணர்வை வழங்குவதற்காக, சுயாதீன ஊழல் தடுப்பு மற்றும் விளையாட்டு நேர்மை அமைப்பான ‘இன்டெக்ரிட்டி மென்டார்ஸ்’ (Integrity Mentors) என்ற நிறுவனத்தையும் இலங்கை கிரிக்கெட் சபை இதற்காகப் பயன்படுத்தியுள்ளது.










