நான் மக்களின் தோழன்: சண்டியர் அல்லன் – கிளிநொச்சி சம்பவம் குறித்து அமைச்சர் விளக்கம்

வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட உதவித்திட்டங்களின் முதற்கட்ட நிகழ்வு இன்று (17.07.2026) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று காலை எனக்குத் தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திப் பேசினார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அக்கூட்டம் பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பேசுபொருளாக மாறியது.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நான் தாக்க முயன்றதாக வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், நான் அவ்வாறான ஒரு நபர் அல்லன். யாருடனும் சண்டை போடுவதோ அல்லது மோதல்களில் ஈடுபடுவதோ எனது குணம் கிடையாது.

நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவம் ஜனாதிபதிக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், அங்கு நடந்த உண்மையான நிலைமைகளைத் தொலைபேசி வாயிலாக ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான துல்லியமான தரவுகளைச் சேகரிக்குமாறு ஜனாதிபதி என்னிடம் கேட்டுக்கொண்டார்.

ஏனெனில், எதிர்வரும் ஆண்டில் எமது அரசாங்கம் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கே முன்னுரிமை வழங்கவுள்ளது. மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் இந்த சமூகப் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தங்களது பிரச்சினைகளைத் தெரிவிக்கலாம்.

என்னுடைய அமைச்சுப் பதவி என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. தேசிய மக்கள் சக்தியினருக்கு மட்டுமன்றி, எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதே எமது பிரதான நோக்கமாகும். அனைவரையும் அரவணைத்துக்கொண்டே எமது பயணம் தொடரும்.

நாட்டில் இன்று இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் மட்டும் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை எனச் சிலர் பேசுகின்றனர்.

எதிர்காலத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளை அலுவலகங்கள் மாவட்ட ரீதியில் திறக்கப்படவுள்ளன. எனவே, யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எதிர்காலத்தில் நீங்கள் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்.

மக்களின் பொதுப்பணத்தைக் கொள்ளையடித்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஊழல்வாதிகள் அனைவரும் நிச்சயம் விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடும். இது அநுரகுமாரவின் அரசாங்கம், இங்கு மோசடிகளுக்கு எவ்வித இடமும் இல்லை.

எமது ஜனாதிபதி குப்பி லாம்பு வெளிச்சத்தில் படித்து, வறுமை மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் முன்னுக்கு வந்தவர். அதனால்தான் ஏழை எளிய மக்களின் பக்கம் நின்று அவர் சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றார்.

அரசு அதிகாரிகளைக் கூடச் சுதந்திரமாக வேலை செய்யவிடாமல் இங்குள்ள சிலர் வதந்திகளைப் பரப்பி வந்தனர். ரணில் விக்கிரமசிங்க சிறைக் கம்பி எண்ணினார், மஹிந்த ராஜபக்ஷவும் கம்பி எண்ண வேண்டிய நிலை வரலாம். சட்டத்தை அமுல்படுத்தும்போது நாம் ஒருபோதும் தராதரம் பார்ப்பதில்லை” என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles