ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து: மஸ்கெலியா பகுதி யுவதி உயிரிழப்பு

ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள தலைக்கவசம் (Helmet) தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில், மலையகப் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மஸ்கெலியா, பிரவுன்சீக் தோட்டத்தின் ராணிப் பிரிவைச் சேர்ந்த வரதராஜா தமயந்தி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த யுவதி, தனது வாழ்வாதாரத்திற்காக ஹோமாகம பிரதேசத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

நேற்று (21) இத்தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட பாரிய தீப் பரவல் காரணமாக, இவரால் தப்பிச் செல்ல முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, யுவதியின் திடீர் மரணம் குறித்து அவரது தந்தைக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, உறவினர்கள் இன்று ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். அங்கு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸ் விசாரணைகள் மற்றும் பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர், யுவதியின் சடலம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மேற்படி தீ விபத்தில் நான்கு இளைஞர்களும், இந்த யுவதியும் என மொத்தம் ஐவர் பலியாகினர்.

– மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

Related Articles

Latest Articles