ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் தலவாக்கலை பேருந்து நிலையத்தில் பாரிய குளவிக் கூடு: அச்சத்தில் பயணிகள்

நுவரெலியா மாவட்டத்தின் பிரதான பேருந்து நிலையங்களில் ஒன்றான தலவாக்கலை பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பகுதியில் பாரிய குளவிக் கூடு ஒன்று நீண்டகாலமாக காணப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையக் கட்டிடத்தின்நாவலபிட்டி பஸ்ரிக்குமிடத்தில் மேற்பகுதியில், பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்திற்கு மேலாக இந்த பாரிய குளவிக் கூடு அமைந்துள்ளது.

குறித்த குளவிக் கூடு கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் காணப்படுவதாகவும், இதுவரை பொதுமக்களுக்கு குளவிக் கொட்டு சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் அங்கு கடமையாற்றும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், குளவிக் கூட்டுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், ஒரே நேரத்தில் அதிகளவான குளவிகள் வெளியேறி பொதுமக்களை தாக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, பேருந்துகளின் தொடர்ச்சியான இயக்கம், அதிர்வுகள் மற்றும் அதிகளவான மக்கள் நடமாட்டம் காணப்படும் இந்த இடத்தில், குளவிக் கூடு அமைந்திருப்பது எதிர்காலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

குளவிகள் தமது கூட்டை பாதுகாக்கும் இயல்பைக் கொண்டுள்ளதால், கூட்டை நேரடியாக கலைப்பது அல்லது அதற்கு இடையூறு ஏற்படுத்துவது குளவிகளின் தாக்குதலைத் தூண்டக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக குளவிக் கொட்டுக்கு இலக்காகி பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் தலவாககலை பேருந்து நிலையத்தில் காணப்படும் இந்த குளவிக் கூட்டை அதிகாரிகள் உடனடியாக அவதானத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குளவிக் கூட்டை பொதுமக்கள் அல்லது பேருந்து ஊழியர்கள் தாங்களாக அகற்ற முயற்சிக்காமல், உரிய நிபுணர்களின் ஆலோசனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், குளவிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘தற்போது ஆபத்து ஏற்படவில்லை என்பதால் எதிர்காலத்திலும் ஆபத்து ஏற்படாது’ என அலட்சியப்படுத்தாமல், மக்கள் அதிகம் கூடும் பொது இடம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மலைவாஞ்ஞன்

Related Articles

Latest Articles