தொடர் விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நுவரெலியா பகுதிக்கு பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதால், நுவரெலியா நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
கடந்த 25-ஆம் திகதி மாலை முதல் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவில் குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மிதமான மழையுடன் கூடிய சீரான காலநிலை நிலவி வருவது, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கணிசமாக உயர்ந்துள்ளதால், நுவரெலியாவில் உணவகங்கள், விடுதிகள் (Hotels & Lodges) மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
சிறப்பு அம்சமாக, கிரேகரி ஏரியில் (Gregory Lake) நடத்தப்படும் படகுச் சவாரி மற்றும் குதிரைச் சவாரிகளில் ஈடுபடச் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பயணிகளின் வாகன வருகை அதிகரித்துள்ளதால், நுவரெலியா நகரப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்களை நிறுத்துவதற்கு (Parking) இடமில்லாத சூழலும் நிலவுகிறது.
(சுற்றுலா வருபவர்கள் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் தொடர்பில் விழிப்பாகவே இருக்க வேண்டும். மழையுடனான வானிலை தொடர்வதால் நீர்மட்டம் அதிகமாகவே உள்ளது.)










