மனப் பிரமைகளைக் காவியக் கலையாக்கிய விசித்திரக் கலைஞர்: புள்ளிகளின் ராணி காலமானார்

தனது மனப் பிரமைகளை அரிய கலைப் படைப்புகளாக மாற்றி, உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய முன்வரிசைக் கலைஞர் (Avant-garde artist) யாயோய் குசாமா (Yayoi Kusama) தனது 97-வது வயதில் காலமானார்.

இத்தகவல் அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அவர் ஆகஸ்ட் 14 அன்று காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.

“தனது வாழ்நாளின் இறுதி நாட்கள் வரை அவர் தூரிகையைக் கைவிடாமல் தொடர்ந்து ஓவியங்களை வரைந்து வந்தார். அன்பு மற்றும் ஆன்மாவின் நித்தியத் தன்மையை அவர் தனது கலை வழியே தொடர்ந்து தேடினார்” என அவரது கலைக்கூடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1929-இல் ஜப்பானின் மட்சுமோட்டோ நகரில் பிறந்த குசாமா, சிறுவயதிலேயே காட்சி மற்றும் ஒலி சார்ந்த மனப் பிரமைகளாலும் (Hallucinations) கவலைக் கோளாறுகளாலும் பாதிக்கப்பட்டார்.

27 வயதில் நியூயார்க் சென்ற அவர், ஆண்டி வார்ஹோல் (Andy Warhol) போன்ற பிரபல கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி சர்வதேச அளவில் புகழ்பெற்றார்.

அளப்பரிய கலைச் சாதனைகள்

புள்ளி வடிவ ஓவியங்கள் (Polka dots), பூசணிக்காய் வடிவக் கலைப் படைப்புகள் (Pumpkin motifs) மற்றும் கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டு எல்லையற்ற உலகத்தைப் பிரதிபலிக்கும் “இன்ஃபினிட்டி ரூம்ஸ்” (Infinity rooms) ஆகியவை இவரது கலைப் பயணத்தின் மைல்கற்களாகும்.

2024-இல் மெல்போர்னில் நடத்தப்பட்ட இவரது கலைக் கண்காட்சியை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். இது ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே அதிக மக்களால் பார்வையிடப்பட்ட கண்காட்சியாகப் பதிவானது.

1966-இல் வெனிஸ் பினாலே (Venice Biennale) நிகழ்வில் அழைப்பு இன்றி நுழைந்து, 1,500 பிரதிபலிக்கும் பந்துகளை வைத்து இவர் நடத்திய ‘நார்சிசஸ் கார்டன்’ (Narcissus Garden) கலைப் பிரச்சாரம் உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றது.

ஆபாச எதிர்ப்புக் கருத்துக்கள், அமைதிப் போராட்டங்கள் எனத் தனது விசித்திரமான பாணியிலும் துணிச்சலான சிந்தனையிலும் கலை உலகைப் புரட்டிப் போட்ட யாயோய் குசாமாவின் மறைவு சர்வதேசக் கலை உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

Related Articles

Latest Articles