கண்டிக்கு ‘மெட்ரோ பேருந்து’ சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பரந்தளவிலான மறுசீரமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், கண்டி நகரை மையப்படுத்திய முக்கிய போக்குவரத்துத் திட்டங்கள் குறித்துப் பின்வரும் விபரங்களை வெளியிட்டார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணிகள் கலகெதர வரை நீடிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, இந்த பாதையைக் கன்னொருவை வரை இணைப்பதற்கான நீண்டகாலத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கலகெதர – கடுகஸ்தோட்டை பாலத்தை அகலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அத்துடன், பேராதனைப் பாலத்திற்கு அருகில் இரண்டு புதிய மேம்பாலங்களை (Flyovers) அமைப்பதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பேராதனைப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இப்பாதையிலான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க வழிவகை ஏற்படும்.
மலையகத் தலைநகரான கண்டியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலுக்குத் தீர்வுகாணவும், மக்களின் பயண வழிமுறைகளை எளிதாக்கவும் இந்த உட்கட்டமைப்பு மேம்பாடுகள் பெரிதும் உதவும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக ரயில் பாதைகளை சீரமைக்கும் பணி இடம்பெற்றுவருகின்றது.
