பிக்கு ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் தாமாகவே முன்வந்து துறவற ஆடையைக் களைந்து ஒப்படைக்க வேண்டும். சிறைக்குள் துறவற ஆடை அணிந்திருப்பது அந்த ஆடையை அவமதிப்பதாகவே அமையும்” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஒவ்வொரு மதத்துக்கும் சட்டக் கட்டமைப்புகள் இருந்தாலும் நாட்டிலுள்ள பொதுச் சட்டமே மேலானது; அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் பொன்சேகா மேலும் கூறியவை வருமாறு:
“நாட்டில் அமுலில் உள்ள பொதுச் சட்டமே ஏனைய சட்டங்களைவிடவும் மேலானது. ஒவ்வொரு மதத்துக்கும் வெவ்வேறான சட்ட நடைமுறைகள் இருக்கலாம். ஆனால் அனைத்துப் பிரஜைகளும், மதத் தலைவர்களும் பொதுச் சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டும். சட்டம் என்பது அனைவருக்கும் சமம். சட்டத்துக்கு மேலானவர்கள் என எவரும் இல்லை.
பிக்கு ஒருவர் துறவற ஆடை அணிந்திருந்தால் அந்தத் துறவற ஆடைக்கென மதிப்பு உள்ளது. துறவற ஆடை அணிந்திருப்பவர் வெள்ளைத் துணி விரிக்கப்பட்ட நாற்காலியிலேயே அமர்வார்.
சிறைக் கைதியானால் கூலி வேலை செய்ய நேரிடும், உணவுக்கு வரிசையில் நிற்க வேண்டி வரும், சக கைதிகளின் கழிப்பறையைக் கூடச் சுத்தப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். துறவற ஆடையில் அதனைச் செய்தால் அது அந்த ஆடைக்குச் செய்யும் அவமதிப்பாக இருக்கும்.
எனவே, பிக்கு ஒருவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் தாமாகவே முன்வந்து துறவற ஆடையைக் களைய வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
பின்னர் விடுதலையானால் அவருக்குத் துறவற ஆடையை வழங்குவதா இல்லையா என்பது பற்றி மத ரீதியில் முடிவுகளை எடுக்க முடியும்” என்றார் பொன்சேகா.
…………

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) நாளை செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 20) ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்று தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காகவே தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அழைப்புக்கு அமைவாகத் தாம் ஆஜராகவுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
……….
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: பேராசிரியர் ராஜ் சோமதேவவின்
இடைக்கால அறிக்கை நீதிமன்றில்
யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கில், தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் பிரதிகளைப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும், வழக்கோடு தொடர்புடைய ஏனைய உரிய தரப்பினருக்கும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இந்த வழக்கு தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இரண்டு விசேட விண்ணப்பங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
அதில், ஏற்கனவே செம்மணி வழக்கு தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிலுள்ள சோமரத்ன ராஜபக்ஷவிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, அவரிடமிருந்து வாய்மொழி மூலமான முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கும், ‘சி-40’ கார்பன் பரிசோதனைக்கு மாதிரிகளை அனுப்புவதற்கும் அனுமதி கோரப்பட்டிருந்தது.
விண்ணப்பங்களை ஆராய்ந்த நீதிமன்றம், சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாய்மொழி வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதி வழங்கியது.
அதேநேரம், ‘சி-40’ கார்பன் பரிசோதனை தொடர்பான கோரிக்கை குறித்து எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தோண்டியெடுக்கப்பட்ட எலும்புகளைப் பரிசோதிப்பதற்கான நிபுணர் குழுவின் விவரங்கள் எதிர்வரும் வாரம் மன்றில் தாக்கல் செய்யப்படும் என்றும், அதன் பின்னரே விரிவான ஆய்வுகள் தொடங்கும் என்றும் சட்ட வைத்திய அதிகாரியினால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 2026 நவம்பர் மாதம் 19ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

…………….
நேரடியாக சீன நாணயத்தில் வர்த்தகம் – சீன வங்கியின் கொழும்புக் கிளையில் ஆரம்பம்
சீன வங்கியின் (Bank of China) கொழும்பு கிளை, இலங்கையில் முதல் ரென்மின்பி (RMB) தீர்வு வங்கியாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம், சீனாவுடனான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அமெரிக்க டொலர் வழியாக அல்லாமல், நேரடியாக சீன நாணயமான ரென்மின்பி மூலம் தீர்வு செய்ய அனுமதிக்கும் தனது செயற்பாடுகள் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி , கொழும்பிலுள்ள சீன வங்கியின் கிளையை ஒரு தீர்வு வங்கியாக அங்கீகரித்துள்ளது.
இந்த நடவடிக்கை, இலங்கையில் வங்கி அமைப்புக்கும் சீனாவின் நிதி அமைப்புக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் என்று மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கே.ஜி.பி. சிறிகுமாரா கூறினார்.
இருப்பினும், இந்த வசதி எந்த அளவிற்கு பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் நன்மைகள் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த முயற்சியின் வெற்றி, இந்த வசதியை நிறுவுவதை மட்டும் சார்ந்தது அல்ல, அது எந்த அளவிற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் சார்ந்தது,” என்று வியாழக்கிழமை நடந்த தொடக்க விழாவில் அவர் கூறினார்.
ஒரு ரென்மின்பி தீர்வு வங்கி என்பது, சீனப் பெருநிலப்பரப்பிற்கு வெளியே ரென்மின்பி பரிவர்த்தனைகளைச் செயலாக்கவும், தீர்வு செய்யவும், மற்றும் முடித்து வைக்கவும் சீன மக்கள் வங்கியால் நியமிக்கப்பட்ட ஒரு கடன் வழங்கும் நிறுவனமாகும்.
இதுவரை, ரென்மின்பியைக் கையாளும் உள்ளூர் கடன் வழங்குநர்கள் சீனாவில் உள்ள வங்கிகள் வழியாகவே சென்று வந்தனர்.
“முன்னர், இலங்கையில் உள்நாட்டு வங்கிகளுக்கு இடையேயான யுவான் பரிமாற்றங்கள் பொதுவாக சீனாவில் உள்ள தொடர்பு வங்கிக் கணக்குகள் வழியாகவே அனுப்பப்பட வேண்டியிருந்தது. இதனால் கூடுதல் செயலாக்க நேரமும் இடைத்தரகர்களும் தேவைப்படக்கூடும்,” என்றும் அவர் சிறிகுமார கூறினார்.
வங்கிகளும் வணிக நிறுவனங்களும் இப்போது தீர்வு வங்கியுடன் யுவான் கணக்குகளைப் பராமரிக்கலாம், சீனாவுடன் எல்லை தாண்டிய யுவான் கொடுப்பனவுகளைச் செய்யலாம், மேலும் உள்நாட்டில் யுவான் கொடுப்பனவுகளைத் தீர்க்கலாம்.
இது செயல்திறனை மேம்படுத்தும், பரிவர்த்தனைச் செலவுகளைக் குறைக்கும், மற்றும் பரிமாற்றங்களை மிகவும் வசதியானதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
இறக்குமதியாளர்கள் ரூபாயை அமெரிக்க டொலராகவும் பின்னர் யுவானாகவும் மாற்றுவதைத் தவிர்க்கலாம்.
இந்த செயல்முறை செலவுகளை அதிகரிப்பதோடு, வர்த்தகர்களைப் பலவிதமான மாற்று விகித அபாயங்களுக்கு உள்ளாக்குகிறது என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறினார்.

………..
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
அவர், தமது பதவிக் காலத்தில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் வலுவற்றதாக்கியதுடன் சிறை தண்டனையையும் உறுதி செய்தது.
இந்நிலையில் ஞானசார தேரர் மீண்டும் சிறை செல்வதற்கு தனது அதிகாரிகளால் செய்யப்பட்ட நிர்வாகத் தவறே காரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளதுடன், அதற்காக மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கலகொடஅத்தே ஞானசார தேரர் மீண்டும் சிறையிலடைக்கப்படுவதற்குக் காரணமான நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்பத் தவறு என்னவென்பதை தெளிவுபடுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிக்கை ஒன்ற வெளியிட்டு இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தேரரை விடுதலை செய்ய நீதிமன்றத்திற்கு நேரிட்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தொழில்நுட்பத் தவறொன்று இடம்பெற்றுள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் முற்றாகச் சரியானது என்றும், தான் அந்தத் தீர்ப்பை மதிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு பிரதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்ததோடு, நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அரசியலமைப்பின் 105 வது பிரிவின் கீழ் நீதிமன்றத்தை அவமதித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு இலக்கங்கள் 37417/10 மற்றும் 40042 இன் கீழ் இவ்வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இந்த இரண்டு வழக்குகளின் கீழ் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதற்காக, அது தொடர்பான ஆவணங்களை நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட வேண்டியிருந்தது.
ஜனாதிபதி செயலகத்தின் சட்டப் பிரிவுக்குப் பொறுப்பான மேலதிக சிரேஷ்ட செயலாளரினால் அது குறித்துத் தனக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், உரிய கோரிக்கை நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, அமைச்சின் அனுமதி இன்றி வெறும் தனது கையொப்பம் மட்டுமே பெறப்பட்டுள்ளதாகவும், அது தன்னை தவறாக வழிநடத்திய ஒரு செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
………….

அல்லைப்பிட்டி விபத்தில்
பெண் ஒருவர் உயிரிழப்பு!
– இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டிப் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் ஓட்டோவும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமையுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை முற்பகல் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன், அதே திசையில் பயணித்த ஓட்டோ மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
…………
அக்குறணையில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கொங்கிறீட் கலவை வாகனத்தின் சாரதி , அலவத்துகொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
………..
‘காவந்திஸ்ஸ’ யானையின் மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவும், யானைகளைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்காகவும் ஜனாதிபதியினால் நிபுணர் குழு நியமனம்
2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் கல்கமுவ, சியம்பலங்கமுவ பகுதியில் இடம்பெற்ற ‘காவந்திஸ்ஸ’ யானையின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளல், காட்டு யானைகளின் நலனுக்கான உரிய செயற்பாட்டு முறை ஒன்றைத் தயாரித்தல் மற்றும் யானைகளைப் பாதுகாக்கும் தேசிய வேலைத் திட்டம் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சின் செயலாளர் ஏ.எச். சரத் விஜேசிங்கவின் தலைமையிலான இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் டி. சமிந்த பெர்னாண்டோ,
பேராசிரியர் ஏ.ஜி. அனில் புஷ்பகுமார, பேராசிரியர் யூ.கே. காலிங்க பத்மலால், கலாநிதி ஜகத் குணவர்தன மற்றும் சட்டத்தரணி சரக ஜயரத்ன ஆகியோர் செயற்படுகின்றனர்.
இந்த நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் டப்ளியு.டப்ளியு. ஹெரிசன் செயற்படுவார்.
“காவந்திஸ்ஸ” யானையின் மரணம் நிகழ்ந்த விதம், அதில் தாக்கம் செலுத்திய உடனடி மற்றும் மறைமுக காரணங்கள், சிகிச்சை நடவடிக்கைகளில் ஏதாவது தவறுகள் அல்லது கவனக்குறைவுகள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணைகளை நடத்துவதுடன், காட்டு யானைகளின் நலனுக்காக உரிய செயற்பாட்டு நடைமுறை ஒன்றைத் தயாரிப்பதும், யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதும் இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளாகும்.
இந்தச் செயற்பாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் இக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான தமது இறுதி விசாரணை அறிக்கை, முன்மொழியப்பட்ட காட்டு யானை நலனுக்கான உரிய செயற்பாட்டு நடைமுறைக் கட்டமைப்பு மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய முழுமையான அறிக்கை, 30 நாட்களுக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.











