தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், அவரது படுக்கைக்கு அருகிலேயே பெண் ஒருவர் தனது காதலரைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ‘எச்.சி.ஏ புளோரிடா நார்த் புளோரிடா’ (HCA Florida North Florida) மருத்துவமனையில், நான்காம் கட்ட கல்லீரல் புற்றுநோய்க்காக டோனா கம்மிங்ஸ் (81) என்ற முதியவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தனது மகள் காமி கம்மிங்ஸ் (Camie Cummings), தனது காதலரான சாண்டி ஆடம்ஸை (Sandy Adams) திருமணம் செய்து கொள்வதைப் பார்க்க வேண்டும் என்பதே டோனாவின் கடைசி ஆசையாக இருந்தது.
தனது மகளைப் பராமரிக்கும் சாண்டியை ‘தேவதூதன்’ என்று அழைத்த டோனா, இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனத் தொடர்ச்சியாக விரும்பி வந்தார்.
தாயின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவரது படுக்கையிலேயே திருமணம் செய்து கொள்வதாக மகள் காமி வாக்குறுதி அளித்தார். இதனையறிந்த மருத்துவமனை ஊழியர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவின் நடைபாதையை திருமண நிகழ்வுக்கான ஒரு சிறப்பு இடமாக உடனடியாக அலங்கரித்தனர். மேலும், குடும்பத்தினர் கொண்டாடுவதற்காக கேக் மற்றும் பானங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
முன்னாள் செவிலியரான தனது தாய், தங்களை வளர்ப்பதற்காகப் பல தியாகங்களைச் செய்தவர் என்றும், அவரது கடைசி நாட்களில் அவரை மகிழ்ச்சிப்படுத்துவதே தங்களது நோக்கம் என்றும் காமி தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்களின் உதவியால் இந்தத் திருமணம் மிகவும் அற்புதமாக நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தனது ஆழந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
திருமணம் நிறைவடைந்த சிறிது நேரத்திலேயே தாய் டோனா சாந்தமாக உயிரிழந்தார். தாய் இனி எந்த வலியும் இன்றி அமைதியாக விடைபெற்றுள்ளதாகவும், எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்த நிம்மதியுடன் அவர் விடைபெற்றுள்ளார் என்றும் காமி உருக்கமாகத் தெரிவித்தார்.
செவிலியர் பயிலும் போது நண்பர்களாக அறிமுகமாகிப் பின்னர் காதலர்களாக மாறிய காமி மற்றும் சாண்டி தம்பதியினர், வரும் ஏப்ரல் மாதம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பெரிய அளவில் திருமணக் கொண்டாட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
நோயாளி மற்றும் அவரது குடும்பத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தீவிர சிகிச்சைப் பிரிவையே திருமண மண்டபமாக மாற்றிய மருத்துவமனை ஊழியர்களின் மனிதநேயச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.










