நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆறுகளில் அடித்து வரப்பட்ட உடல்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனை பிணவறைகள் அனைத்தும் உடல்களால் நிரம்பி வழிகின்றன. இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்கவும், அவர்களை உறவினர்கள் அடையாளம் காணவும் நேபாள காவல்துறை ‘QR’ குறியீடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
சித்வான் பகுதியில் மட்டும் 137 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்குள்ள மருத்துவமனைகளில் 30 முதல் 50 உடல்களை மட்டுமே வைக்கும் வசதி உள்ளதால், பயன்படுத்தப்படாத அரசு கட்டிடம் ஒன்று குளிரூட்டப்பட்டு 250 உடல்களைச் சேமிக்கும் தற்காலிகப் பிணவறையாக மாற்றப்பட்டுள்ளது.
தனஹுன், கோர்கா, தாடிங், நவல்பராசி போன்ற பிற மாவட்டங்களில் மீட்கப்பட்ட 93 சடலங்கள் பொக்காரா நகர பிணவறைகளுக்கு மாற்றப்பட்டன. ஆனால், அங்குள்ள மருத்துவமனைகளின் மொத்த கொள்ளளவான 88 வசதியையும் தாண்டி உடல்கள் குவிந்துள்ளன.
இதேபோல, தாடிங் மாவட்டத்தில் மீட்கப்பட்ட உடல் பாகங்கள் உட்பட 37 உடல்களில் சில காத்மாண்டுக்கும், கோர்காவில் மீட்கப்பட்ட உடல்கள் பொக்காராவுக்கும், நவல் பராசியின் உடல்கள் பால்பா பகுதிக்கும் மாற்றப்பட்டுத் தற்காலிக இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்களின் புகைப்படங்கள், கைரேகைகள், உடலமைப்பு விவரங்கள் மற்றும் பிற தகவல்களைச் சேகரித்து ஒரு பட்டியலாகத் தயாரித்துள்ளனர்.
இந்த விவரங்களை அணுகும் வகையில் ஒரு ‘க்யூஆர்’ குறியீட்டை உருவாக்கி, தங்களது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்து, தங்கள் குடும்பத்தினரின் விவரங்களுடன் ஒப்பிட்டு உடல்களை அடையாளம் காண முடிவதோடு, தேவையின் அடிப்படையில் டிஎன்ஏ பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.
சபிக்கப்பட்ட 26-ம் திகதி
பெரும்பாலான இயற்கை பேரிடர்கள், தீவிரவாத தாக்குதல்கள் 26-ம் திகதி நடைபெற்று உள்ளன. குறிப்பாக கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி 26-ம் திகதி குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் திகதி ஈரானில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் திகதி இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளில் சுனாமி அலைகள் தாக்கின.
கடந்த 2005 ஜூலை 26-ம் திகதி மும்பையில் கனமழை பெய்து, பெருவெள்ளம் ஏற்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ம் திகதி குஜராத்தின் அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் திகதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கடந்த 26-ம் திகதி நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக 26-ம் திகதி சபிக்கப்பட்ட நாளாக மாறியிருக்கிறது.










