லுணுகலை நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறையான முறையில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, அதற்கு உடனடி தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, லுணுகலை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினர் , வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று (27) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கையில், கடந்த 25 ஆண்டுகளாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறவில்லை என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களும் தேவையான நேரங்களில் கிடைக்காததால், சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிபில மற்றும் பசறை நகரங்களுக்கு சென்று எரிபொருள் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதனால் அன்றாட வாழ்வாதாரத்திற்காக முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபட்டுள்ள சாரதிகள், விவசாயிகள், சிறு தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார மற்றும் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தொடர்ந்து, கோஷங்களை எழுப்பியவாறும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டக்காரர்கள் லுணுகலை நகரிலிருந்து நடைபேரணியாக லுணுகலை ஆலயத்திற்குச் சென்று, அங்கு ஆலயத்திற்கு முன்பாக தேங்காய் உடைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அதன் பின்னர் வாகன பேரணியாக லுணுகலை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்குச் சென்ற அவர்கள், பிரதேச செயலாளர் சுபாஷ் நாணயக்காவிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்து, எரிபொருள் விநியோகப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்குமாறு வலியுறுத்தினர்.
த.டிமேஷன்










