“ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்தால் எதுவும் நடக்கப்போவதில்லை”

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று (24) கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் கே.டி. லால்காந்த மேலும் தெரிவிக்கையில்,

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை  செப்டம்பர் 22 ஆம் திகதியே சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார். ஆனால், அத்தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இப்போராட்டத்திற்கான திகதியை ஐக்கிய மக்கள் சக்தி நிர்ணயித்துவிட்டது.

22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் சர்வஜன வாக்கெடுப்பைக் கோரி பிரச்சாரங்களை முன்னெடுத்த போதிலும், நீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பதும், அது சர்வஜன வாக்கெடுப்பிற்கு வழிவகுக்காது என்பதும் அவர்களுக்கு முன்கூட்டியே தெரியும்.

இச்சட்டமூலத்தில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு வழிவகுக்கும் வகையில் எந்தவொரு சரத்தும் இடம்பெறவில்லை என்பது அதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனினும்,  அரசியல் நோக்கங்களுக்காகவே எதிர்க்கட்சியினர் இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

Related Articles

Latest Articles