ஜனாதிபதியைப் போலவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மை பலமும், உள்ளூராட்சி மன்றங்களின் பெரும்பான்மை அதிகாரமும் அரசாங்கத்திற்குப் காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 24 ஆம் திகதி பொல்துவ சந்தியில் அமைதி வழியிலான போராட்டத்தில் ஈடுபடவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டுள்ள இப் போராட்டம் குறித்து, ‘ஐக்கிய மகளிர் சக்தி’ மற்றும் ‘ஐக்கிய கலைஞர்கள் சக்தி’ ஆகியவற்றின் உறுப்பினர்களைத் தெளிவூட்டும் நிகழ்வொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைச் கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்:
“கடந்த காலத்தில் நிலக்கரி மோசடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த வேளை, அது நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தாலும், தற்சமயம் அதற்குப் பொறுப்பான வலுசக்தி அமைச்சரும் செயலாளரும் அப்பதவிகளில் இல்லை.
மக்கள் பலத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை அரசாங்கம் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த மக்கள் பலத்தின் காரணமாகவே 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி கூட வீட்டிற்குச் செல்ல நேர்ந்தது.
22 ஆவது திருத்தம் ஊடாக ஜனநாயகம் நாசமடைகின்றது
22 ஆவது திருத்தச் சட்டமூலம் ஊடாக நாட்டின் கௌரவமிக்க நீதித்துறையானது நிறைவேற்று அதிகாரத்தின் கட்டளைகளுக்கு அடிபணியச் செய்யப்படுகின்றது. நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை இல்லாமலாக்கப்படுகின்றது. நீதிபதிகளின் நம்பகத்தன்மைக்குக் களங்கம் ஏற்படுத்தி நிறைவேற்று அதிகாரம் பலப்படுத்தப்படுகின்றது. 17, 18, 19, 20 மற்றும் 21 ஆவது திருத்தச் சட்டங்களுக்குக் கையை உயர்த்தியவர்களும் இந்த அரசாங்கத்தில் இருக்கின்றனர். தற்சமயம் கொள்கை ரீதியிலான அரசியல் சீரழிந்து வருகின்றது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை மாற்றுவது மக்கள் இறையாண்மையைப் பாதிக்கும் என்பதால், இது தொடர்பில் முன்னுதாரணங்கள் இருக்கும்போது 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமென நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கம் நாட்டில் ஹிட்லர் ஆட்சியை உருவாக்குகிறது
இந்த அரசாங்கம் நாட்டை சர்வாதிகார ஹிட்லர் ஆட்சியை நோக்கி நகர்த்தி வருகின்றதுடன், மக்கள் இறையாண்மையையும் அழித்தொழித்து வருகின்றது. அரசியலமைப்பு என்பது மக்கள் இறையாண்மையின் அடிப்படையில் அமைந்ததாகும். மக்கள் வசமுள்ள உரிமையே அனைத்திற்கும் மேலானது. இது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் வழங்கப்படாத நிலையில், ஜனாதிபதி அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ளப் போவதாகப் பகிரங்கமாகக் கூறி வருகிறார்.
ஜனநாயகத்தின் பிரதான மூன்று தூண்களுக்கும் உரிய தனித்தனி அதிகாரங்களும், அந்த அதிகாரங்களை ஒன்றையொன்று கட்டுப்படுத்தும் தடைகளும் சமன்பாடுகளும் (Checks and balances) அமைந்து காணப்படுகின்றன. இந்த மூன்று தூண்களுக்கும் இடையிலான சமநிலையைச் சீர்குலைத்து, கௌரவமிக்க நீதித்துறையை நிறைவேற்று அதிகாரத்திற்கு அடிமையாக்க அரசாங்கம் முற்படுகின்றது.
ஜே.வி.பி யின் எதிர்ப்பும் சர்வதேச எதிர்ப்பும்
சட்டத்தரணி விஜயநாயக்க உட்படப் பலரும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கங்கள், சர்வதேச சமூகத்தின் பல தரப்பினரும் கூட இதற்கு எதிராகத் தீர்மானங்களை எடுத்துள்ளனர். நாட்டில் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.
நீதிமன்ற அமைப்பில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) உதவியுடன் 2023 இல் தயாரிக்கப்பட்ட அறிக்கையில், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது பற்றிக் குறிப்பிடப்படவில்லை. அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை ஒழிக்கவும், பலகட்சி முறையை அகற்றிவிட்டு நீதித்துறையைத் தனிக் கட்சி கட்டுப்படுத்தும் முறையை நோக்கி நகரவும் முயற்சிக்கிறது.
இளைஞர் கழகத் தேர்தல்களில் தொடங்கிய இந்தத் தனிக் கட்சி ஆட்சிப் போக்கை, தற்போது நாடு முழுவதும் பரவலாக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறு அரசாங்கம் நீதித்துறையின் மேலாண்மையை இல்லாமலாக்கி, பலகட்சி முறையை ஒழித்துவிட்டு, தனிக் கட்சியினர் மாத்திரம் ஆட்சி செய்யும் சர்வாதிகார முறையை நோக்கிச் செல்ல முற்படுகின்றது,” எனத் தெரிவித்தார்.










