அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் கூட்டுத் தாக்குதல்கள், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்தமை, மற்றும் அமெரிக்கக் மசகு எண்ணெய் கையிருப்பு குறைந்தமை ஆகியவற்றைத் தொடர்ந்து, புதன்கிழமை அன்று மசகு எண்ணெய் விலை பீப்பாய்க்கு $3 இற்கும் மேல் உயர்ந்தது.
ஜிஎம்டி (GMT) நேரப்படி புதன் அதிகாலை 3 மணியளவில், ப்ரென்ட் (Brent) மசகு எண்ணெய் எதிர்கால விலை $3.30 (3.9%) உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு $87.39 ஆக இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் விலை $3.05 (3.8%) உயர்ந்து பீப்பாய் $82.31 ஆக உயர்ந்தது.
“அமெரிக்கப் படைகள் மீதான திடீர் தாக்குதலை இடைமறித்து முறியடித்ததாக அமெரிக்கா கூறியதைத் தொடர்ந்து, எண்ணெய் விலையில் மீண்டும் இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளது,” என்று ‘ஐஎன்ஜி’ (ING) வங்கியின் சந்தை பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“சவூதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்து ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்கள் ஈராக்கிலிருந்து ஏவிய ட்ரோன்களை சவூதி அரேபியா இடைமறித்து அழித்தது,” என்று கூறிய அவர்கள், அமெரிக்க மற்றும் சவூதி படைகள் கிழக்கு ஈராக் முழுவதும் உள்ள ஆயுதக் கிடங்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் குறிப்பிட்டனர்.
இந்தச் சமீபத்திய நிகழ்வுகள், பாரசீக வளைகுடாவில் பதற்றம் விரைவில் தணியும் என்ற எதிர்பார்ப்பைக் குறைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மத்திய கிழக்கில் உள்ள தனது படைகளை நோக்கி ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தான் இடைமறித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை டெஹ்ரானின் “திடீர் தாக்குதல் முயற்சி” என்று வாஷிங்டன் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படை பின்னர் வெளியிட்ட அறிக்கையில், ஜோர்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளம் மற்றும் ராணுவத்தின் மத்திய கட்டளை மையத்தைக் குறிவைத்து பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாகத் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ட்ரோன் தாக்குதல்களுக்குக் காரணமான ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் மீது, அமெரிக்க மத்திய கட்டளையகத்துடன் இணைந்து தங்கள் ஆயுதப் படைகள் “குறிப்பிட்ட இலக்குகள் மீது தாக்குதல்களை” நடத்தியதாக சவூதி அரேபியாவும் தெரிவித்துள்ளது.
ஜூலை 24 உடன் முடிவடைந்த வாரத்தில் அமெரிக்க மசகு எண்ணெய் கையிருப்பு சுமார் 3.3 மில்லியன் பீப்பாய்கள் குறைந்ததாக, ‘அமெரிக்க பெட்ரோலிய நிறுவனம்’ (API) தரவுகளை மேற்கோள் காட்டி சந்தை வட்டாரங்கள் செவ்வாயக்கிழமை தெரிவித்தன.
மேலும் எண்ணெய் விலைக்கு ஆதரவளிக்கும் வகையில், தன்னார்வ உற்பத்திக் குறைப்புக்குப் பிறகு திட்டமிட்டபடி எண்ணெய் உற்பத்தியை மீண்டும் தொடங்கிய பிறகு, ‘ஓபெக் பிளஸ்’ (OPEC+) அமைப்பு அக்டோபர் முதல் மூன்று மாதங்களுக்கு எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன.
