தரமற்ற தலைக்கவசங்களுக்கு (Helmet) எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.
SLS சான்றிதழ் பெறாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல், விற்பனை செய்தல் சட்டவிரோதமானது என அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2015.07.16 ஆம் திகதியுடைய 1923/65 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் 59 ஆம் இலக்கக் கட்டளைக்கு அமைய, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்களுக்கு SLS 517 தரநிலைக்குரிய SLS தரச்சான்றிழ் முத்திரை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜூலை 27 அன்று நாடு முழுவதும் நடத்தப்பட்ட 98 சிறப்புச் சோதனைகளின் போது, SLS சான்றிதழ் இலச்சினை இல்லாத 431 தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக CAA தெரிவித்துள்ளது.
மேலும், SLS உரிமங்கள் புதுப்பிக்கப்படாத காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 3,520 தலைக்கவசங்களை விற்பனை செய்வதற்கு இரண்டு தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 151 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறியதாக கண்டறியப்பட்ட 4,038 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்களுக்கு எதிராக பறிமுதல் மற்றும் விற்பனை இடைநிறுத்தம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் CAA மேலும் தெரிவித்துள்ளது.
