நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேனை, குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அமைதியின்மையால் ஏற்பட்ட சொத்து சேதம் 255 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதன்போதே மேற்படி தகவல் வெளியிடப்பட்டது.
சிறைக்கைதிகள் வன்முறையாக நடந்து கொள்வதைக் குறைப்பதற்காக, அதிகளவில் மனநல மருத்துவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வுச் சட்டத்தின் திருத்த வரைபை விரைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், சட்டவரைவுத் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக ஓய்வுபெற்ற அனுபவமிக்க அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் இணைத்து செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
பாடசாலைக் கட்டமைப்பில் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்காக, கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளால் கூட்டாகச் செயல்படுத்தப்படும் ‘மிதுரு பாடசாலை’ வேலைத்திட்டத்தின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன். மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தும் பிள்ளைகளைக் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டுவதில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆலோசகர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
அதிக போதைப்பொருள் அபாயம் மற்றும் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், சர்வதேசப் பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என்பதும் இங்கு தெரியவந்ததுடன், தேசிய செயற்பாடு சபை இது குறித்து விசேட கவனம் செலுத்தியது.
பிள்ளை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துக் கொள்ளும் வகையில் போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளை மருந்தகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது என்றும், பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து கவனத்துடன் இருப்பதன் முக்கியத்துவமும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
