Home Blog Page 63

நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!

T20 World Cup தொடரின் 31வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில்கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடிய யுவராஜ் சம்ரா, 65 பந்துகளில் 110 ஓட்டங்களை குவித்து அணியின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார்.

அவரது சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களைப் பெற்றது.

174 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி கட்டுப்பாட்டுடனும் கணிக்கப்பட்ட தாக்கத்துடனும் ஆடியது. வெறும் 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 176 ஓட்டங்களை எட்டிய அவர்கள், 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில், இப்பிரிவில் இடம்பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் அணி அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

IMF பிரதானி மலையகத்துக்கு விஜயம்!

IMF பிரதானி மலையகத்துக்கு விஜயம்!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, உடபளாத்த பிரதேச சபைக்குட்பட்ட மாவதுர கிராமத்துக்கு இன்று (17) வருகை தந்திருந்தார்.

மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு, மக்களுடன் கலந்துரையாடினார்.

அமைச்சர் அனில் ஜெயந்த, மத்திய மாகாண ஆளுநர், பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபேகோன், கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக்க உடவத்த, உடபளாத்த பிரதேச செயலாளர் ஆத்மா திலுக்ஷி ஜயரத்ன உள்ளிட்டோரும் அங்கு சென்றிருந்தனர்.

க.யோகா

 

ரூ. 1750: வரமா, சாபமா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான, அரசாங்கம் அறிவித்த 200 ரூபாய் வருகைக் கொடுப்பனவுடன் சேர்த்து 1,750 ரூபாய் அதிகரித்த சம்பளம் கிடைத்துள்ளது. பல தோட்டங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு பொங்கி கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த வாரத்தில் உள்ளூரின் சில பிரதான தமிழ் ஊடங்களின் தலைப்புச் செய்திக்கூட அதுதான். உண்மைதான், நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு… முதுகெலும்பு… எனச் சொல்லியே நிமிர்ந்து நிற்க முதுகெலும்பின்றி தட்டுத்தடுமாறி, திக்கற்று நிற்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ‘1750’ என்பது வெறும் ஒருநாள் சம்பளமல்ல, அது அவர்களின் மிகப்பெரும் கனவுகளில் ஒன்று, வாழ்வாதாரம், நம்பிக்கை, எதிர்காலம் இப்படி எப்படி வேண்டுமோ அர்த்தப்படுத்தலாம்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாயாக அதிகரிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கையெழுத்தானது. இதற்கமைய பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் 22 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

2026 வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 1,350 ரூபாயாக காணப்பட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 400 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த 400 ரூபாய் அதிகரிப்பில் 200 ரூபாயினை, அதாவது 1,350 ரூபாய் என்ற அடிப்படை சம்பளத்தை 1,550 ரூபாயாக பிராந்திய தோட்ட நிறுவனங்கள் வழங்க வேண்டுமெனவும், ஒரு நாள் பணிக்கான வருகைக் கொடுப்பனவு 200 ரூபாய் என்ற அடிப்படையில் ஊக்குவிப்புப் கொடுப்பனவை அரசாங்கம் வழங்க வேண்டுமெனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. தோட்ட நிறுவனங்கள் மற்றும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்தப்பட்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த சம்பள அதிகரிப்பு மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களின் கைகளையும் சென்றடைந்ததா? என்ற கேள்விக்கான விடையை தேடுகிறது இந்த கட்டுரை.

“அப்போ நாங்க யாரு”?

பெருந்தோட்டங்களில் பதிவு செய்யப்படாத, நாள் சம்பளத்தின் அடிப்படையில் வேலை செய்யும் ‘கைக்காசு’ தொழிலாளர்களுக்கு (Casual Workers) இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை. பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்கும் அடிப்படைச் சம்பளமான 1,550 ரூபாய் இவர்களுக்கு கிடைக்கும். ஆனால் ஒரு நாள் பணிக்கான வருகைக் கொடுப்பனவான 200 ரூபாய் இந்தத் தொழிலாளர்களுக்கு கிடைக்காது.

இந்த விடயத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள ‘கைக்காசு’ தொழிலாளர்கள், நிரந்தரமாக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இணையாக தாமும் பணியாற்றுவதாகவும் ஆகவே தமக்கும் இந்த கொடுப்பனவு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

“நாங்களும், அவர்களும் (பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள்) ஒரே அளவில்தான் பணியாற்றுகின்றோம். ஆனால் எங்களுக்கு மாத்திரம் அரசாங்கம் வழங்கும் 200 ரூபாய் கிடைக்கவில்லை. அவர்கள் மாத்திரமா தொழிலாளர்கள். அப்போது நாங்கள் யார்? நாங்கள் தொழிலாளர்கள் இல்லையா? உதாரணமாக எங்கள் தோட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் 65 பேர் மாத்திரமே பணியாற்றுகின்றனர்.

எனினும் பதிவு செய்யப்படாத ‘கைக்காசு’ தொழிலாளர்கள் 75 பேர் இருக்கின்றனர். தோட்டமே எங்களால்தான் இயங்குகிறது. ஆனால் எங்களுக்கு சம்பள உயர்வு இல்லை.” என ஹைபொரஸ்ட் இல 02 தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியான குமார் கவலை வெளியிடுகின்றார்.

பெருந்தோட்டங்களில் குறைந்துச் செல்லும் தொழிற்படையை ஈடுசெய்ய ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களைக் கூட நாற்சம்பளத்திற்கு மீண்டும் பணிக்கு அமர்த்தும் திட்டத்தை பெருந்தோட்ட நிறுவனங்கள் அண்மைக்காலத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளன. ஹைபொரஸ்ட் தோட்டத்தில் பணியாற்றும் 75 கைக்காசு தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களே.

வேலையை காட்ட ஆரம்பித்த பெருந்தோட்ட நிறுவனங்கள்
தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்குவதற்கு முன்பதாகவே, தொழிலாளர்களுக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் நெருக்கடியை கொடுக்க ஆரம்பித்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பாக பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்பள அதிகரிப்புடன் இணைந்ததாக தொழிலாளர்களுக்கு வேலைப்பளுவை அதிகரிப்பதை வழமையாக கொண்டுள்ளன. இதுவொரு தொடர்கதை, எனினும் இந்த தடவை அவ்வாறான எந்தவொரு நெருக்கடியையும் தொழிலாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்காது அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் ஹொரணை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன ஒரு நாளுக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை 20 கிலோவிலிருந்து 22-23 வரை அதிகரித்துள்ளதாக ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட களனிவத்தை தோட்டம், மால்புரோ பிரிவு தோட்டத் தொழிலாளர்களை சுமார் 11 மணித்தியாலங்கள் பணியாற்றுமாறு தோட்ட நிர்வாகம் நிர்ப்பந்திப்பதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். சம்பள அதிகரிப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பினை அடுத்தே தொழிலாளர்கள் இவ்வாறு அதிக நேரம் பணியாற்றுமாறு பணிக்கப்படுவதாக பெண் தொழிலாளி ஒருவர் குறிப்பிட்டார்.

“1,750 ரூபா சம்பளம் போட்ட பெறகு எங்களுக்கு சரியான கரைச்சலாக இருக்குது. கொழுந்மு கரைச்ச. 6 மணிக்கு வேல விட்டு போறோம். காலை 8 மணிக்கு மலைக்கு போறோம். ஆறு மணி, ஏழு மணி நாங்க வீட்டுக்கு போகயில. பிள்ளைகள் இருக்கு.” என்கிறார் அந்த பெண் தொழிலாளி.

மேலும், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரித்து வழங்க வேண்டுமென்ற காரணத்தினால் வெளியாட்களை நாள் சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்திய சம்பவத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்ட தொழிலாளர்களை நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்த சம்பவம் ஒன்றும் அண்மையில் பதிவாகியிருந்தது.

அட்டன், சாமிமலை, கவுரவில தோட்டத்தைச் சேர்ந்த 8 தொழிலாளர்களே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதோடு, தம்மை பணி இடைநிறுத்தம் செய்தமைக்கு எதிராக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தனர். எவ்வாறெனினும் அவர்களின் கோரிக்கைக்கு தோட்ட நிர்வாகம் பதில் வழங்காத நிலையில், சத்தியாக்கிரக போராட்டம் உண்ணாவிரமாக மாற்றமடைந்தது. இந்த நிலையில் தோட்ட நிர்வாகம் அவர்களை மீண்டும் பணிக்கு செல்லலாம் என எழுத்து மூலம் அறிவித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்பள அதிகரிப்பை காரணம் காட்டி தமது சுயரூபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில், அரசாங்கமும், துறை சார்ந்த அமைச்சரும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரித்து, எவரும் செய்யாத வரலாற்று சாதனையை நிகழ்த்திவிட்டதாக பெருமை பேசும் நிலையில், அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக தொழிலாளர்களின் உழைப்பை தொடர்ச்சியாக உறிஞ்சும் நிறுவனங்களையே ஊக்குவித்துள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக கடந்த காலத்தில் கூட்டு ஒப்பந்தம் ஊடாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட அவர்களின் சேமநலன்கள் குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. மேலும், கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக சம்பளத்தின் முழுத்தொகையையும் பெருந்தோட்ட நிறுவனங்களே செலுத்தின, அரசாங்கம் ஒரு சதத்தையேனும் செலவிட்டதில்லை,

ஆனால் தற்போதைய புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் நிறுவனங்களுக்காக அரசாங்கம் பெருந்தொகை நிதியை செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதாவது தனியார் நிறுவனங்களுக்காக உழைக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்க அரச நிதியை செலவிடுகிறது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். இது என்றுமே நடந்திராத புதினம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இரகசிய ஒப்பந்தம் என்ன சொல்கிறது?

நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் கையெழுத்திடப்பட்டது என்னவோ உண்மைதான், படங்கள், காணொளிகள் வெளியாகியிருந்தன. ஆனால் இந்த கட்டுரை எழுதப்படும் வரையில் அந்த ஒப்பந்தம் குறித்த ஆவணத்தின் நகல் பொது வெளிக்கு வரவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 22 பெருந்தோட்ட நிறுவனங்களின் பெயர்ப்பட்டியல் மாத்திரம் வெளியாகியிருந்தது.

இந்த இரகசிய ஒப்பந்தம் உண்மையில் ஒரு வரலாற்று ஆவணமும்கூட, காரணம் இவ்வாறான ஒரு ஒப்பந்தம் இதற்கு முன்னர் கையெழுத்தானதில்லை.

இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தொடர்பில் எவரும் அறியாத நிலையில் அதில் பல்வேறு பாரதூரமான – தொழிலாளர்களுக்கு பாதகமான – விடயங்கள் காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

ஒப்பந்தத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள விடயங்களை எந்தவொரு தரப்பினராலும் தொடர முடியாத பட்சத்தில் மற்றுமொரு தரப்பால் அதுத் தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்க முடியாது என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

“குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் 8ஆவது சரத்தில், இந்த புரிந்துணர்வு உள்ள எதுவும் எந்தவொரு தரப்பினருக்கும் சட்டபூர்வமாக கட்டுப்படத்தக்க கடப்பாடுகளை உருவாக்காது என்பதும், இதில் உள்ள எந்தவொரு நிபந்தனையையும் நிறைவேற்றுவதற்கு தரப்பினர் சட்டரீதியாக வற்புறுத்தப்படமாட்டார்கள் என்பதும் தரப்பினரால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டு உடன்படப்படுகிறது.” என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதாக எம்.பி., ஜீவன் தெரிவிக்கின்றார்.

சட்ட வலுவற்ற உடன்படிக்கை

பெருந்தோட்ட அமைச்சின் கீழ் வரும், கொக்கோ, மிளகு மற்றும் ஏலக்காய் செய்கையாளர்களுக்கு 1,920 ரூபாய் 58 சதம் நாளாந்த கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டீ.என்.கே.வடயலித்தவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டிருந்தது.

ஜனவரி மாதத்திற்கான வாழ்க்கை செலவு குறியீடு குறித்த ஆய்வின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் முன்னதாக டிசம்பர் மாதம் காணப்பட்ட வாழ்க்கைச் செலவு குறியீட்டின் அடிப்படையில் அந்த தொழிலாளர்களுக்கு 1,852 ரூபாய் 39 சதம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு அதுவும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்தது. இந்த விடயத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து அறிவிப்பு செய்யப்பட்ட அதே மாதத்தில் – நவம்பர் மாதத்தில் – அதே பெருந்தோட்டத்துறை அமைச்சிக்கு கீழ் வருத் கொக்கோ, ஏலக்காய், மிளகு உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,852 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு அது அதிவிசேட வர்த்தமானியில் 24 ஜனவரி அன்று அறிவிக்கப்பட்டது.

அதாவது அவர்களின் சம்பளம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக சட்ட வலுவானதாக காணப்படவில்லை. ஆகவே வர்த்தமானி அறிவிப்பு அல்லது கூட்டு ஒப்பந்தம் மூலமாக இல்லாமல் இவர்களுக்கு மாத்திரம் புரிந்துணர்வு உடன்படிக்கையில் – Memorandum of Understanding (MOU) – கையெழுத்திடுவது ஒரு பாரபட்சமானமாக விடயம் மாத்திரமல்ல, இது அரசாங்கத்திற்கும் கம்பனிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வேத் தவிர தொழிலாளர் சார்பான உடன்படிக்கையாக எங்கும் வெளிப்படவில்லை.”

இதேவேளை, இந்த உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தில் தொழிலாளர்கள் சார்ந்த தீர்மானங்களை எடுப்பதற்கும், பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் ஏதுவாக இருக்குமென முன்னாள் அமைச்சரான ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

“எதிர்காலத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்வதற்காக இந்த புரிந்துணர்வு இணக்கப்பாட்டை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிட வேண்டும். இதுவரைக் காலமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் முத்தரப்பு ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டு வந்தது. குறித்த ஒப்பந்தத்தில் கம்பனிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் என்பன கையெழுத்திடும்.

எனவே அதில் கூறப்படும் எந்தவொரு விடயமும் மறைக்கப்படமாட்டாது. அதில் வெளிப்படை தன்மை பேணப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு இணக்கப்பாடு அவ்வாறானதல்ல. எனவே தான் இதனை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடுமாறு வலியுறுத்துகின்றோம். ஆகக் குறைந்த 1,550 ரூபாய் அடிப்படை சம்பளம் என்பதையாவது குறிப்பிட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும்.

அவ்வாறில்லை எனில் 3 வருடங்களின் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது தெரியாது.”
பாரபட்சத்தைக் காட்டிய தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பதாகவே அந்த கட்சி பெருந்தோட்டத் தொழிலாளர்களை பாரபட்சமாகவே நடத்தியதாக முன்னாள் எம்.பி., திலகராஜ் சுட்டிக்காட்டுகின்றார்.

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் அந்த மக்கள் எந்தளவிற்கு பாரபட்சத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தனர் என்பதை அவர் ஆய்வு ரீதியாக தெளிவுபடுத்துகின்றார்.

“தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும்போதே இந்த மக்களுக்கான சம்பள உயர்வு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற வகையில் வழங்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த விடயம், நாட்டில் உள்ள ஏனைய மக்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் சம்பளம் சம்பந்தமான அல்லது தொழில் உரிமை சம்பந்தமான பகுதியில் அது இடம்பெறவில்லை.

அதாவது சம்பளம் சம்பந்தமான அல்லது தொழில் உரிமை சம்பந்தமாக சொல்லப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கையின் அந்த பக்கத்தில் இந்த மக்களின் (மலையக மக்களின்) படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் அந்த பக்கத்தில் குறிப்பிடப்படவில்லை இதுவொரு பாரபட்சமான செயற்பாடு. தேசிய மக்கள் சக்தியின் ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கான வாழ்க்கை செலவுக்கேற்ற ஊதியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பெருந்தோட்டத் தொழிலாளர்களை இனரீதியாக வகைப்படுத்தும் ஒரு பாரபட்சமாகும். 2024ஆம் ஆண்டு ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் 2025 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திலேயே நாட்டிலுள்ள ஏனைய தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை அறிவித்தது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான அதிகரிப்பையும் செய்யவில்லை, இதுவும் ஒரு வகையில் பாரபட்சம்தான்.” என்கிறார் திலகர்.

புலம்பும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள்
சம்பள அதிகரிப்பு விடயத்தில் இறப்பர் பால் வெட்டும்/சேகரிக்கும் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்கள் நெருக்கடியை கொடுப்பதை அந்த மக்கள வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாகவே அதிகளவு இறப்பர் பாலினை சேகரிக்கக் கோரும் நிர்வாகம் தற்போது சம்பள அதிகரிப்பினையடுத்து மேலதிகமாக இரண்டு கிலோ பாலினை ஒரு தொழிலாளி சேகரிக்க வேண்டுமென வற்புறுத்துவதாக எட்டியாந்தோட்டை, கணேபல்ல தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“சம்பளம் கூட்டுனதால பால் கூட கேக்குறாங்க. 9 கிலோ கேக்குறாங்க. சாதாரணமாகவே 7 கிலோ கேப்பாங்க. ஆனால் அதுக்கூட கஷ்டம்தான். எங்களுக்கு 6 கிலோதான் எடுக்க முடியும். மரத்துல இலை கொட்டிருச்சி. பாலும் குறைவதான் வரும். சம்பளம் கூடியதால் மரத்தில் பால் கூடாதே.” என்கிறார் ஒரு பெண் தொழிலாளி.

பெருந்தோட்ட நிறுவனங்கள் இறப்பர் தோட்ட தொழிலாளர்களை பாரபட்சத்துடன் நடத்துவதாக கணேபல்ல தோட்டத்தைச் சேர்ந்த சகோதர மொழிப் பேசும் பெண் தொழிலாளி ஒருவர் குறிப்பிடுகின்றார்.

“கஷ்டப்பட்டு தானே உழைக்கின்றோம். ஏன் ஒவ்வொருரையும் ஒவ்வொரு முறையில் நடத்துகின்றீர்கள். இந்த முதலாளிகளுக்கு எங்கள் கவலை தெரியாது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5, 5.30ற்கு இருட்டில் நாங்கள் வேலைக்கு செல்கின்றோம். எனினும் அவர்கள் மிகவும் தவறு செய்கின்றார்கள். ஏதாவது ஒரு நாளில் பாலில் ஏதாவது பிரச்சினை என்றால் அன்று எங்களுக்கு பெயர் இல்லை (சம்பளம் இல்லை) எங்கள் கவலையை நாங்கள் மாத்திரமே அறிவோம். பாம்புகள், மிருகங்கள் கால்களை கடந்து போகும். இதுத் தொடர்பில் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.”
இனியும் கூலி வேண்டாம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உடைமையாளர்களாக மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த கோரிக்கையை மறுக்கும் வகையிலேயே இந்த சம்பள அதிகரிகரிப்பு வழங்கப்படுவதாக முன்னாள் எம்.பியான திலகர் குறிப்பிடுகின்றார். “இந்த மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக ஆக்க வேண்டுமென்பதே அந்த மக்கள் சார்பிலான அமைப்புகள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக காணப்படுகிறது.

நாளாந்த சம்பளத்தை அதிகரிக்கும் இந்த கூலி முறைமை தொடர்ந்து தங்கியிருக்கும் கலாசாரத்திலேயே இந்த மக்களை வைத்திருக்கும். இதன் ஊடாக இந்த கோரிக்கைகள் மழுங்கடிக்கப்படுவதோடு, அதுத் தொடர்பில் பேசப்படுவது தடுக்கப்படும்.”

தனியே மலையகத்தில் வேலை செய்யக் கூடிய தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பை செய்திருப்பதால் மாத்திரம் ஒட்டுமொத்தமாக மலைய மக்களின் கோரிக்கைளும் நிறைவேற்றப்பட்டுவிட்டது, அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்ற முடிவுக்கு வருவது தவறான எண்ணமாகும். ஆனால் அப்படியொரு விம்பத்தை காட்டுவதற்கான முயற்சியில் ஜனாதிபதியும்கூட இறங்கியுள்ளார், அவர் ‘தேயிலைத் தோட்டத்தில் இறங்கியது’ கூட அதன் முயற்சிகளில் ஒன்றுதான். எனினும் இந்த 1,750 ரூபாய் இந்த மக்களின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது என்பதை ஜனாதிபதியும் அறிவார், ஆனால் அவரும் சில மேடைகளில் சில வேசங்களைப் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்களை சந்தித்த ஜனாதிபதி ‘அதிகம் குனிய வேண்டாம்’ எனக் கூறியிருந்தார். உண்மைதான் அந்த மக்கள் விரும்பி குனியவில்லை, அவர்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களாலும், அதன் பின்னர் அதிகாரத்திற்கு வந்த சிங்கள அரசாங்கங்களாலும் குனிய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதே கசப்பான வரலாறு. இந்த ஜனாதியாவது தம்மை தலைநிமிரச் செய்வார் என்ற நம்பிக்கை அந்த மக்கள் மனதில் இப்போது ஆழமாக வேரூன்றியுள்ளது. எனினும் பெருந்தோட்ட நிறுவனங்களையே தம்மால் கட்டுப்படுத்த முடியாத ஜனாதிபதி சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் இணக்கத்துடன் எப்படி இந்த மக்களின் காணி உரிமை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்கப்போகின்றார் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

பார்தீபன் சண்முகநாதன்
சுயாதீன ஊடகவியலாளர்

எதிர்க்கட்சி தலைவரின் மரணம்: ஐரோப்பிய நாடுகளின் குற்றச்சாட்டை நிராகரித்தது ரஷ்யா

மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை நச்சுத் தவளைகளின் விஷத்தைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு, ஆர்க்டிக் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் நவால்னி மா்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை நவீன ஆய்வுக்கு உட்படுத்தியதில், இந்தத் தவளை விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நாடுகள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

ரஷியாவின் இயற்கையான சூழலில் எங்கும் கிடைக்காத இந்த நச்சுப் பொருள் அவரது உடலில் இருந்தது, இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பதை நிரூபிப்பதாக அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மரியா ஜாகரோவா கருத்து வெளியிடுகையில்,

” மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டுப் பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, கற்பனையான பொய்களைப் பரப்புகின்றன. இந்த ஆதாரமற்ற புகாா்களை நாங்கள் ஏற்கமாட்டோம் என்றார்.

நவால்னியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது மனைவி யுலியா நவால்னயா ஐரோப்பிய நாடுகளின் ஆய்வுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் என்பது தற்போது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புதின் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த் தரப்புகள் ஒருமனதாகத் தீர்மானம்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது என்று யாழ்ப்பாணத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தற்போதைய அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள, 2015 – 2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கிய ராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசமைப்பு முறையை அடியோடு நிராகரிப்பதாக இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தரப்பினரும் உறுதியாகத் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தீர்வே எட்டப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

” கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் தரப்புகள் மற்றும் அமைப்புகளைக் கொண்ட ஒரு ‘பொதுச் சபை’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு விசேட ‘அரசியல் குழு’ அமைக்கப்படும். இக்குழுவானது திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில், தமிழ் மக்கள் சுயாட்சியை முழுமையாக அனுபவிக்கக்கூடிய அரசமைப்பு யோசனைகளைத் தயாரிக்கும் பணியை முன்னெடுக்கும்.

முக்கியமாக, தமிழ் மக்கள் பேரவையால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனைகள் பெறப்படும். மேலதிகமாக ஏனைய தரப்புகளிடம் உள்ள சிறந்த யோசனைகளும் உள்வாங்கப்பட்டு, ஒரு பொதுவான வரைவு தயாரிக்கப்படும். இந்த வரைவு மீண்டும் பொதுச் சபையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் மக்கள் மட்டத்துக்குக் கொண்டு செல்லப்படும்.” – என்றார்.

கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் எதிர்காலத்தில் இந்த முயற்சியில் இணைய விரும்பினால் அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருக்கும் என்றும், அனைவரையும் அரவணைத்துத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைப் பலப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு பாகிஸ்தான் அழைப்பு!

பாகிஸ்தானும் இலங்கையும், உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, கொழும்பில் இலங்கையின் உயர்மட்டத் தலைவர்களுடன் நேற்று நடத்திய சந்திப்புகளின் போதே இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த ஆகியோரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நக்வி சந்தித்துப் பேசியுள்ளார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சில், இடம்பெற்ற சந்திப்பின் போது, உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆனந்த விஜேபாலவும், மொஹ்சின் நக்வியும் கலந்துரையாடினர்.

சைபர் குற்றம் மற்றும் நிதி மோசடி வலையமைப்புகளை எதிர்ப்பதற்கான கூட்டு உத்தியை உருவாக்குவது குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இரு நாடுகளின் உள்துறை அமைச்சுக்களுக்கு இடையில் நிறுவன ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

காவல்துறை மற்றும் துணை இராணுவப் படைகளுக்கான கூட்டுப் பயிற்சித் திட்டங்கள் தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

பாகிஸ்தானின் தேசிய காவல்துறை அகாடமியில் இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வாய்ப்புகளை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நக்வி வழங்கினார்.

இது அதிகாரி பரிமாற்ற திட்டங்கள் தொழில்முறை திறனை மேம்படுத்தவும் ஒத்துழைப்பின் புதிய வழிகளைத் திறக்கவும் உதவும் என்றும் அவர் கூறினார்.

சைபர் குற்ற மற்றும் நிதி குற்றங்களை திறம்பட சமாளிக்க ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், பாகிஸ்தான் அமைச்சர் நக்வி, இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரை பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் பாகிஸ்தானுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் சிறிலங்காவின் உறுதிப்பாட்டை அமைச்சர் ஆனந்த விஜேபால மீண்டும் உறுதிப்படுத்தினார்.

விளையாட்டு அமைச்சர் கமகேயுடனான தனி சந்திப்பில், விளையாட்டுகளில், குறிப்பாக துடுப்பாட்டத்தில் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினார்.

அதேவேளை, பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகொந்தாவுடனான சந்திப்பின் போது, ​​இரு தரப்பினரும் பாகிஸ்தான்-சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு விடயங்களை மறுபரிசீலனை செய்தனர்.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

சிறிலங்காவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்ட சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவாக இருப்பதாகவும், மேலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பாகிஸ்தானின் உறுதிப்பாட்டையும் நக்வி மீண்டும் வலியுறுத்தினார்.

அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையுமா சிம்பாப்வே?

டி 20 உலகக்கிண்ண தொடரில் இன்றும் (17) மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

31 ஆவது லீக் ஆட்டத்தில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் முற்பகல் 11 மணிக்கு சென்னையில் மோதுகின்றன.

32 ஆவது லீக் போட்டியில் அயர்லாந்து, சிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் வெற்றிபெற்றால் சிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துவிடும்.

கண்டி பல்லேகல மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

33 ஆவது லீக் ஆட்டத்தில் நேபாளம் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் களம் காண்கின்றன.

மரக்கறி விலைப்பட்டியல் (17.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சட்டத்தரணி கொலை குறித்து விரிவான விசாரணை!

சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் தான் பதவி விலகப்போவதில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள பதவி விலகல் கோரிக்கை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-

“சட்டத்தரணி ஒருவரது படுகொலை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டவுடன், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தற்போதைய நிலையில், உயர்மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த காலங்களில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தியவர்களே இன்று எம் மீது அத்தகைய குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். எமது ஆட்சியில் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றிச் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுகின்றன. இந்த விசாரணைகளின் முடிவில் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது நாட்டுக்குத் தெரியவரும்.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது அரசின் முதன்மைப் பொறுப்பு. பழைய அரசியல் கலாசாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காகவோ அல்லது அரசியல் இலாபம் தேடும் கோரிக்கைகளுக்காகவோ நான் பதவி விலகப்போவதில்லை.

சட்டத்தரணிகள் உட்பட அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.” – என்றார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை: பொன்சேகா சுட்டிக்காட்டு!

“தேசிய பாதுகாப்பு தொடர்பில் போலி மாயையை தோற்றுவிப்பதற்கு கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டிய தரப்புகள் முற்படுகின்றன. எனினும், தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலும் எதுவும் இல்லை.”

இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

“தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை இல்லை. எனினும், கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டிய தரப்பினர், தமக்கு தேவையானவற்றை செய்துகொள்வதற்காக போலி மாயையை உருவாக்க முற்படுகின்றனர்.

முப்படையினர் மற்றும் பொலிஸார் உரிய வகையில் செயல்பட்டுவருகின்றனர். ஏதேனும் இடத்தில் குறைபாடு இருந்தால் அதனை நிவர்த்தி செய்யக்கூடிய இயலுமை அவர்களுக்கு உள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கமும் கரிசனை செலுத்தியுள்ளது என தெரியவருகின்றது. பாதாள குழு முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு நடந்தது என்ன?

0
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி, ஈரானின் கோம் நகரில் சுயநினைவற்ற நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என ஒரு உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி டைம்ஸ் யுகே செய்தி...

புத்தாண்டுக்கு முன் நிவாரணம் வழங்குக!

0
"அரிசி, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். எனவே, தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்கு உரிய நிவாரணங்களை...