வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் தேர்தலை நடத்தி வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கினால்தான் பிரச்சினை ஏற்படும்.
இலங்கையில் இதுவரை ஆட்சிபுரிந்த எந்தவொரு ஜனாதிபதியும் இந்த வேலையை (பொலிஸ், காணி அதிகாரம் பகிர்வு) செய்யவில்லை. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதே அணுகுமுறையை பின்பற்றுவார் என நம்புகின்றோம்.
சிலவேளை பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கினால் இந்நாடு பெடரல் ராஜ்யமாகும். அவ்வாறு நடந்தால் இதுவரைகாலமும் பாதுகாத்துவந்த ஒற்றையாட்சி முறைமை இல்லாமல்போகும். இது தேசத்துரோக நடவடிக்கையாகவே அமையும். இவ்வாறானதொரு செயலை ஜனாதிபதி செய்வார் என நம்பவில்லை.” – என்றார் சரத் வீரசேகர.
