போதைப்பொருளுடன் சிறைச்சாலை அதிகாரி கைது

கொழும்பு பொரளைப் பகுதியில் அமைந்துள்ள மகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருட்களை விநியோகித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர், கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 100 கிராம் ‘ஐஸ்’ , 20 கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 20 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி, தெஹிவளை, மெடிக்கல் வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே முதற்கட்டமாக போதைப்பொருள் தொகையுடன் கல்கிஸை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, மகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், வாட்ஸ்அப் (WhatsApp) அழைப்பு ஊடாக தனக்கு வழங்கிய இருப்பிடத் தகவலுக்கு அமைவாகவே இந்த போதைப்பொருள் பார்சலை தான் பெற்றுக் கொண்டதாக சந்தேகநபர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், இந்த போதைப்பொருள் பார்சல் பொரளை, வனத்த வீதியில் உள்ள மற்றொரு நபரிடம் ஒப்படைக்கப்படவிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலின் அடிப்படையில், கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலின் கீழ், போதைப்பொருள் தொகையைப் பெற்றுக்கொள்ளவிருந்த நபரை கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles