5 தொழிலாளர்கள் பணிநீக்கம்: புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தில் போராட்டம்!

5 தொழிலாளர்கள் பணிநீக்கம்: புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தில் போராட்டம்!

புசல்லாவை, ரொச்சைல்ட் (Rothschild) தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை உறுதிமொழியை அடுத்து தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

இத்தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் ஐந்து பேர் திடீரென நிர்வாகத்தினால் பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீக்கப்பட்ட ஐந்து தொழிலாளர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுமே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் கட்சி பேதமின்றி இப்பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தன.

தொழிலாளர்களின் இந்த நியாயமான போராட்டம் குறித்துக் கேட்டறிந்த தொழிலாளர் தேசிய முன்னணியின் (NUW) உப தலைவர் சண்முகராஜ் போராட்டக் களத்திற்கு நேரில் விஜயம் செய்து தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

அத்துடன், இந்த பணிநீக்கம் தொடர்பாக கம்பளையில் உள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் முறைப்பாடு செய்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக எதிர்வரும் 22 ஆம் திகதி (திங்கட்கிழமை) கம்பளை தொழில் திணைக்களத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றிற்கான நேரம் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது தொழிலாளர்களுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும் என்ற பலத்த நம்பிக்கையின் அடிப்படையில், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு நாளை முதல் மீண்டும் வேலைக்குத் திரும்பத் தொழிலாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles