மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர் ஒருவரின் மகனைத் தாக்கிய, தோட்ட முகாமையாளரை உடனடியாக அந்த பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி, தோட்டத் தொழிலாளர்கள் சிலர் ஐந்து நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் தொழிற் சங்கங்கள் கடிதம் ஊடாக விடுத்த கோரிக்கைக்கு அமைய, பதுளை மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில், உதவி தொழில் ஆணையாளர் தலைமையில் நாளைய தினம் இந்த பிரச்சினை குறித்து பேச்சு நடத்தப்படவுள்ளதாக எமது பிராந்திய ஊடகவியலாளர் தெரிவிக்கின்றார்.
மல்வத்தவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பதுளை உனுகல்ல தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஜூலை 18ஆம் திகதி முதல் குறித்த தோட்ட முகாமையாளர் சானக்கவை அப்பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்ததோடு, வேலைநிறுத்தப் போராட்டத்தையும் ஆரம்பித்தனர்.
குறித்த தொழிலாளர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப்போராட்டம் இன்று (ஜூலை 22) ஐந்தாவது நாளாகத் தொடர்கிறது.
தோட்ட காரியாலயத்தில் உள்ள அதிகாரிகள் தோட்ட மக்களுக்கு சரியான சேவைகளை வழங்குவதில்லை எனவும் அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பதுளை, உனுகல்ல தோட்டத்தின் உனுகல்ல பிரிவில் வசிக்கும் தோட்டத் தொழிலாளியின் மகனான கோகுலநாத் மனோஜ்காந்த், தனது வீட்டிற்கு அருகில் கோழிக் கூண்டு ஒன்றை அமைப்பதற்கு அனுமதி கோரி, கடந்த ஏப்ரல் மாதமளவில் தோட்ட முகாமையாளருக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.
மூன்று மாதங்கள் கடந்தும் அந்த கடிதத்திற்கு பதில் கிடைக்காதமையினால், அது குறித்து விசாரிப்பதற்காக அவர் கடந்த ஜூன் 17ஆம் திகதி தோட்ட முகாமையாளரைச் சந்திப்பதற்காகச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தோட்ட முகாமையாளர் தன்னைத் தாக்கியதாக ஹாலிஎல பொலிஸில் மனோஜ்காந்த் முறைப்பாடு செய்துள்ளதுடன், அன்றைய தினமே ஹாலிஎல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், முகாமையாளர் சாணக்கவை உடனடியாக அந்த பதவியிலிருந்து நீக்குமாறும் வலியுறுத்தியும், பதுளை உனுகல்ல தோட்டத்தின் 4 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஜூலை 18ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்ததுடன், அது தொடர்பில் விசாரிப்பதற்காக அந்த தோட்டத்தின் உயர்மட்ட முகாமையாளரான சமிந்த பெரேரா ஜூலை 20ஆம் திகதி குறித்த இடத்திற்கு வந்து தொழிலாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
குறித்த இளைஞரை தாக்கிய தோட்ட முகாமையாளர் சானக்கவின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து, முகாமையாளர் சமிந்த பெரேராவிடம் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் விளக்கமளித்தார்.
“முகாமையாளர் தாக்குவதை பார்த்த தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த சேர் வந்தால் அவர் அருகில் யாரும் செல்லமாட்டார்கள். அருகில், எப்போதும் செல்லமாட்டார்கள். அதற்கு ஒரு முறைமையை ஏற்படுத்துமாறே நாம் உங்களிடம் கோருகின்றோம். சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் எடுக்கட்டும். நாங்கள் சட்டத்தை மதிக்கின்றோம் நாங்கள்.”
கோகுலநாத் மனோஜ்காந்தைத் தாக்கிய தோட்ட முகாமையாளர் சானக்கவின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்தும், தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளைப் பொறுத்துக்கொள்ள தோட்டத் தொழிலாளர்கள் இனிமேலும் தயாராக இல்லை எனவும், தோட்டத்தின் பெண் தொழிலாளர் ஒருவர், முகாமையாளர் சமிந்த பெரேராவிடம் தெரிவித்தார்.










