இன்னும் 10 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமே தொடரும். அந்த ஆட்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பங்காளிக்கட்சியாக இருந்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் 06.07.2020 இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” தலைவர் இருக்கின்றபோது கட்சிபேதமின்றி மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்தார். அவரின் மகன் ஜீவன் தொண்டமான் இன்று தலைமையேற்றுள்ளார். அவரின் தலைமையின் கீழ் தேர்தலில் போட்டியிடுகின்றோம். இந்நிலையில் இ.தொ.காவை பலப்படுத்துவதற்காகவும், ஜீவனுக்காகவும் இளைஞர் கூட்டம் திரள்வதை காணக்கூடியதாக உள்ளது.
பெருமளவான மக்களும் எமது கூட்டங்களில் பங்கேற்கின்றனர். இது மகிழ்ச்சியளிக்கின்றது. ஏனெனில் கட்சியில் இணையாவிட்டாலும் பரவாயில்லை, மலையக சமூகமாக எல்லோரும் ஒன்றாக இருங்கள் என எமது தலைவர் கூறினார். அந்த ஒற்றுமையை தற்போது காணமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலின்போது மலையக மக்களுக்காக எமது தலைவரால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
அடுத்துவரும் 10 ஆண்டுகள் கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதியாக இருப்பார். அவர் தலைமையிலான அரசாங்கமே செயற்படும். அந்த கூட்டணியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் பங்காளிக்கட்சியாக இருக்கின்றது. எனவே, மக்களுக்கான சேவைகளை எம்மால் தொடரமுடியும்.
தேர்தல் முடிவடைந்ததும் சில அரசியல்வாதிகள் நுவரெலியா மாவட்டத்தைவிட்டு ஓடிவிடுவார்கள். ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவ்வாறு அல்ல. உங்களுடன்தான் இருக்கப்போகின்றார். இதுதான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும், ஏனையோருக்குமிடையில் உள்ள வித்தியாசமாகும்.
காங்கிரஸ் அனைத்துவிதமான அபிவிருத்திகளையும் செய்துள்ளது. எனவே, மொட்டு சின்னத்துக்கு வாக்களித்து இ.தொ.கா. உறுப்பினர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.
க.கிசாந்தன்