” பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தமிழ் பாராளுமன்ற அல்லது சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பொன்றை உருவாக்கவேண்டும். அதன் மூலம் இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கமுடியும்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கந்தப்பளையில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மையின மக்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டால் மாத்திரமே எங்களுடைய உரிமைகளையும் அபிவிருத்தியையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.அதே போல ஏனைய சமூகங்களை போல இந்த நாட்டில் சமமான அந்தஸ்தை பெற்று வாழ முடியும்.
பாராளுமன்ற தேர்தலின் பின்பு வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட அனைத்து பகுதிகளையும் இனைத்துக் கொண்டு சிறுபான்மை கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.அது கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டும்.
இன்று அநேகமான சிறுபான்மை வேடபாளர்கள் ஒரு சில தேசிய கட்சியில் இணைந்து போட்டியிடுகின்றார்கள். ஒரு சிலர் தனித்து போட்டியிடுகின்றார்கள்.ஒரு சிலர் சுயேட்சையாக போட்டியிடுகின்றார்கள். ஒரு சில தமிழ் வேட்பாளர்கள் பெரும்பான்மையினரின் முகவர்களாக செயற்படுகின்றார்கள்.முகவர்களாக செயற்படுகின்றவர்கள் தங்களுடைய தனிப்பட்ட இலாபத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்படுகின்றார்கள்.
முகவர்களாக செயற்படுகின்றவர்கள் நிச்சயமாக வெற்றி பெற முடியாது.ஆனாலும் அவர்கள் முகவர்கள் என்ற அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சில வாக்குகளை பெற்றுக் கொள்வதன் மூலமாக தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து பெரும்பான்மை பிரதிநிதிகள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றார்கள்.
இந்த நிலைமை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகமாக காணப்படுகின்றது.கடந்த காலங்களின் ஒரு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கூட போட்டியிட்டு வெற்றி பெற முடியாத சிறுபான்மை உறுப்பினர்கள் போட்டியிடுகின்றார்கள்.இதற்கு காரணம் என்ன?தோல்வியடைவோம் என்று தெரிந்து கொண்டே போட்டியிடுவதன் நோக்கம் என்ன?அதற்கு காரணம் பெரும்பான்மை கட்சிகளிடம் ஒரு தொகை பணத்தை பெற்றுக் கொண்டு பெரும்பான்மை பிரதிநிதிகளை வெற்றி பெற செய்வதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றார்கள்.
எனவே இவ்வாறான ஒரு நிலையில் சிறுபான்மை மக்கள் சிந்தித்து வாக்களித்து எங்களுடைய வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.அப்படி வெற்றி பெறுகின்றவர்கள் ஒரு சிறுபான்மை பாராளுமன்ற கூட்டணியை ஆரம்பித்து அதன் மூலமாக எங்களுடைய மக்களுக்கு உரிமைகளையும் அபிவிருத்தியையும் பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.