” இந்திய அரசாங்கத்தின் நிதியில் மலையகத்தில் வீடுகளை கட்டினார்களேதவிர, நல்லாட்சியின்கீழ் மலையக மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். சதாசிவம் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் என தலவாக்கலையில் நடைபெற்றக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார். ஆனால், அவர்களின் ஆட்சியில் 50 ரூபாவைக்கூட தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளை இங்கு கட்டினார்கள். மற்றும்படி எம் மக்களுக்காக எதனையும் நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் செய்யவில்லை.இப்படி நடந்தும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளருக்கே வாக்குகளை அள்ளி, அள்ளி கொடுத்தீர்கள்.
எனவே, இம்முறையாவது ஆளுங்கட்சிக்கு வாக்களித்து, வெற்றியின் பங்காளிகளாக மாறுமாறு மலையக மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். என்னைப்போன்ற அனுபவமுள்ள அரசியல்வாதிகளால் நிச்சயம் சேவையாற்றமுடியும். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் என்னை நம்புகின்றனர். மக்களும் ஆதரவு வழங்குவார்கள்.” – என்றார்.