ஹவுதிகளுக்கு முடிவு கட்ட சவூதி மாஸ்டர் பிளான்: விரைவில் அதிரடி தாக்குதல்

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தீவிர இராணுவத் தாக்குதலை நடத்தச் சவூதி அரேபியா திட்டமிட்டு வருவதாக பிராந்திய மற்றும் மேற்குலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செங்கடல் கப்பல் பாதையைப் பாதுகாப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, கடலோரப் பகுதிகளை மீட்கும் இலக்குடன் அல்லது பல முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமையக்கூடும் எனக் கருதப்படுகிறது.

அடுத்த சில வாரங்களில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த இராணுவ நடவடிக்கைக்கு, சவூதி அரேபியாவின் மேற்பார்வையில் இயங்கும் ஏமன் படைகள் களத்தில் நேரடியாகத் தலைமை தாங்கும்.

சவூதி வான்படை வான்வழித் தாக்குதல்கள் மூலம் இப்போருக்கு முழு ஆதரவை வழங்கும் எனத் தயாரிப்புப் பணிகளை அறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் ஆதரவு

இப்போருக்கு அமெரிக்கா உளவுத்துறைத் தகவல்களையும் இலக்குகள் தொடர்பான விவரங்களையும் வழங்கி உதவி வருகிறது. மேலும் சில ஐரோப்பிய மற்றும் பிராந்திய நாடுகள் சவூதிக்குத் தற்காப்பு இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.

இருப்பினும், இந்த நட்பு நாடுகள் போர்க்களத்தில் நேரடியாகப் பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நேரடி வான்வழித் தாக்குதல்களை நடத்துமாறு சவூதி அரேபியாவின் முகமது பின் சல்மான் வைத்த கோரிக்கையை டொனால்ட் டிரம்ப் நிராகரித்துவிட்டதாக முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி மற்றும் பாகிஸ்தானின் இராணுவ உதவி

கடந்த மாதம் சவூதி அரேபியாவுடன் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள், இப்போருக்குத் தேவையான இராணுவ தளவாடங்களை வழங்கி வருகின்றன.

பாகிஸ்தான் கடந்த மாதம் நான்கு சரக்கு விமானங்கள் மூலம் வான் பாதுகாப்பு அமைப்புகள், இலகுரக பீரங்கிகள், ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை ஏமனின் ஏடெனிலுள்ள சவூதி ஆதரவு அரசின் மையத்திற்கு அனுப்பியுள்ளது.

மேலும், பாகிஸ்தான் இராணுவ ஆலோசகர்கள் களத்தில் சவூதி மற்றும் ஏமன் படைகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். சவூதியால் வாங்கப்பட்ட துருக்கியின் ட்ரோன்களும் ஏமன் வான்வெளியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பாப் அல்-மந்தேப் நீரிணையை மீட்பதே முதன்மை இலக்கு:
கடந்த மாதம் ஹூதி கிளர்ச்சியாளர்கள் வேகமாக முன்னேறி, சர்வதேசக் கடல்வழிப் பாதையான பாப் அல்-மந்தேப் (Bab el-Mandeb) நீரிணையைக் கைப்பற்றினர்.

இந்நிலையில்தான், அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதைச் சவூதி முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.

ஹூதிகள் பாப் அல்-மந்தேப் நீரிணையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வரை அவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதில் சவூதி உறுதியாக உள்ளது.

இத்தாக்குதல் எப்போது தொடங்கும் என்ற துல்லியமான திகதி இன்னும் வெளியாகவில்லை என்றாலும், எதிர்வரும் வாரங்களிலோ அல்லது நவம்பர் தொடக்கத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகோ தொடங்கலாம் எனக் கணிப்புகள் கூறுகின்றன.

Related Articles

Latest Articles