இராஜதந்திர மற்றும் சட்டப்பூர்வமான விடயங்களுக்கு இடமளிக்குமாறும், அனோஜன் விவகாரத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் ராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் கோரிக்கை விடுத்து ஜனாதிபதியால் எழுதப்படும் கடிதத்துடன் ஆளும் மற்றும் எதிரணியை சேர்ந்த எம்.பிக்கள் குழுவொன்று சவூதி செல்லவுள்ளது.
எனவே, இராஜதந்திர மற்றும் சட்டப்பூர்வமான விடயங்களுக்கு இடமளிக்குமாறும், அனோஜன் விவகாரத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஏனைய அரசியல் காரணிகள்போல, உயிருடன் தொடர்புபட்ட இந்த விடயத்தையும் அரசியலாக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் இப்பிரச்சினை பெரிதாகக்கூடும்.” – என்றார் அமைச்சர்.










