பசறையிலிருந்து பிடமாருவ நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று, இன்று (20) மகாதோவ வைத்தியசாலைக்கு அருகில் திடீர் இயந்திரக் கோளாறுக்கு உள்ளான நிலையில், சாரதியின் திறமையான செயற்பாட்டினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் 12.40 மணியளவில் பசறை நகரிலிருந்து பயணத்தை ஆரம்பித்த பதுளை இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவுக்குச் சொந்தமான குறித்த பேருந்தில், கோளாறு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.
மகாதோவ வைத்தியசாலைக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பேருந்தின் ‘போல் ஜொயின்ட்’ (Ball Joint) எனப்படும் முக்கியப் பகுதி உடைந்ததன் காரணமாகவே இந்த இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது உடனடியாகச் தொழிற்பட்ட சாரதி, பேருந்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து வீதியின் வலதுபுறத்தில் இருந்த மண் மேட்டில் மோதி நிறுத்தியுள்ளார்.
சாரதி உடனடியாகப் பேருந்தைக் கட்டுப்படுத்தி நிறுத்தத் தவறியிருந்தால், அது வீதியின் இடதுபுறமிருந்த ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பாரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என அதில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சாரதியின் இந்தச் சமயோசிதச் செயலால் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










