இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம் இன்று

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய ‘அரசியல் டீலுக்கு’ அமைவாகச் செயற்படுவதாகத் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன நாடாளுமன்றத்தில் முன்வைத்த கருத்துக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை இன்று முற்பகல் 11 மணிக்கு கொழும்பில் கூடவுள்ளது.

நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிராகச் சட்டத்தரணிகள் சங்கம் அண்மையில் விசேட பிரேரணையொன்றை நிறைவேற்றியிருந்தது.

அதனையடுத்து, மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்போது ஐக்கிய மக்கள் சக்தியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வழங்கவுள்ளதாக வாக்களித்துள்ளதாகவும், அதற்கு அமைவாகவே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு குறித்துத் தவறான விடயங்களைச் சமூகமயப்படுத்துவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்து அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரசியல் நோக்கத்துடனான இவ்வாறான அவதூறுகளை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷனவின் கருத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடிய சட்ட மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சங்கக் கட்டடத்தில் இந்தக் சிறப்புக் கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles