மேற்காசிய மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
நியுயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரில், உலகத் தலைவர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்காசியாவில் நிலவும் மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய அவர், அதனால் அந்தப் பிராந்தியத்தைத் தாண்டி உலகளவில் ஏற்பட்டுள்ள கடுமையான விளைவுகளையும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பல தசாப்த கால இராஜதந்திர நிலைப்பாட்டை வலியுறுத்திய அமைச்சர் விஜித ஹேரத், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்றும், நிலையான அமைதிக்கு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையே ஒரே சாத்தியமான வழி என்றும் வலியுறுத்தினார்.
சுயநிர்ணய உரிமை உட்பட பலஸ்தீன மக்களின் மறுக்க முடியாத உரிமைகளை இலங்கை தொடர்ந்து ஆதரிக்கிறது, என்று கூறிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் , 1980-களில் பலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஆரம்பகால நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பதை நினைவூட்டினார்.
1967-க்கு முந்தைய எல்லைகளுக்குள் இஸ்ரேலுடன் இணைந்து அமைதியாக வாழக்கூடிய, சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பலஸ்தீன அரசை ஆதரிப்பதில் அனைத்துலக சமூகத்துடன் இலங்கை கொண்டுள்ள ஒற்றுமையை அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
காசாவில் போர்நிறுத்தத்தைக் கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் சமீபத்திய தீர்மானங்களை வரவேற்ற அவர், எவ்விதத் தடையுமின்றி மனிதாபிமான உதவிகள் கிடைப்பதன் அவசியத்தையும், அப்பிராந்தியத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான உடனடி அனைத்துலக முயற்சிகளின் தேவையையும் வலியுறுத்தினார்.
வெளிநாட்டு உறவுகளுக்கு அப்பால், வெளிப்படைத்தன்மை, அறம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட தனது அரசாங்கத்தின் உள்நாட்டு ஆணையை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“ஊழல் எவ்வாறு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது மற்றும் நம்பிக்கையைச் சிதைக்கிறது என்பதை நாம் மிகத் தெளிவாகக் கண்டுள்ளோம்,” என்று குறிப்பிட்ட அமைச்சர் விஜித ஹேரத், அரசியல் தலையீடு, பயம் அல்லது பாரபட்சம் இன்றி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்இலங்கையின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று உறுதியளித்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான தேசிய ‘ஒன்றிணைந்த தேசம்’ போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்; இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த ஓராண்டில் விநியோகச் சங்கிலியில் முக்கிய நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது உரையை நிறைவு செய்கையில், ஐக்கிய நாடுகள் அமைப்பை புதுப்பித்து வலுப்படுத்துவதற்கான அர்த்தமுள்ள கட்டமைப்புச் சீர்திருத்தங்களைக் கோரும் ‘UN80’ முன்னெடுப்பிற்கு இலங்கையின் அளிக்கும் ஆதரவை அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
