இலங்கையில் தற்போது உயிருடன் வாழும் மிக வயதான ஆண் எனக் கருதப்படும் கரந்தெனிய, அங்குலுகல்ல பகுதியைச் சேர்ந்த பி.எச். மெனியல் தனது 111ஆவது வயதை எட்டியுள்ளார் என முதியோர் தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
1915 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் திகதி பிறந்த மெனியல், 111 வயதைக் கடந்த நிலையிலும் சிறந்த மனநலத்துடன் காணப்படுவதுடன், கூர்மையான நினைவாற்றலையும் கொண்டுள்ளார்.
அவர் மகிழ்ச்சியான மனநிலையுடன் சுறுசுறுப்பாகச் செயற்பட்டு வருவதுடன், குடும்பத்தினரின் அன்பு, அரவணைப்பு மற்றும் பராமரிப்பில் வாழ்ந்து வருவதாக முதியோர் தேசிய செயலகம் குறிப்பிட்டுள்ளது.
மெனியலுக்கு ஐந்து மகன்களும் நான்கு மகள்களுமாக மொத்தம் ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் மூத்த பிள்ளை உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய எட்டுப் பிள்ளைகளும் உயிருடன் ஆரோக்கியமாக உள்ளனர்.
மேலும், அவருக்கு 92 பேரப்பிள்ளைகளும் 12 பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர்.
அவரது நலன்களைப் பேணுவதற்குத் தேவையான பராமரிப்பு, வசதிகள் மற்றும் சமூகத் தொடர்புகளைப் பேணுவதற்கான வாய்ப்புகளை அவரது பிள்ளைகள் அனைவரும் இணைந்து வழங்கி வருவதாக முதியோர் தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் மிக வயதான உயிருடன் வாழும் ஆண் என அவரை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில், முதியோர் தேசிய செயலகம் மற்றும் கரந்தெனிய பிரதேச செயலக அதிகாரிகள் நேற்று முன்தினம் (03) அவரது இல்லத்துக்குச் சென்று கௌரவித்துள்ளனர்.
