நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கை முறையில் பழங்களைப் பழுக்க வைக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய சட்ட ஏற்பாடுகளை விரைந்து அறிமுகப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளுடன் நடத்திய உயர்மட்டக் கலந்துரையாடலின் போதே இத்தகவலை வெளியிட்டார்.
தற்போது சந்தைகளில் வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி உள்ளிட்ட அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கும் பழங்களை விரைவாகப் பழுக்க வைப்பதற்காகக் கார்ப்பைட் மற்றும் எத்தரெல் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவ்வாறான நச்சுத்தன்மை கொண்ட பழங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குத் தொடர்ச்சியாக எண்ணற்ற முறைப்பாடுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இது மக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதுடன், சமூகத்தில் ஒரு தீவிரப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தும் முதற்கட்டமாக, இரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைக்கும் கிடங்குகள் மற்றும் வியாபாரத் தளங்களை இலக்கு வைத்து அதிரடி சோதனைகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான விழிப்புணர்வுகளும் எச்சரிக்கைகளும் ஏற்கனவே வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், லாப நோக்கத்திற்காக இந்த ஆபத்தான நடைமுறையைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வியாபாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.










