மாபெரும் தியாகத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், மக்களின் ஒற்றுமை காரணமாகவுமே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போர், இன்று முதல் இரண்டு வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மேற்கொண்ட சமரச முயற்சியை அடுத்து, இந்த போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்நிலையில், இந்த போர் நிறுத்த அறிவிப்பு தொடர்பாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் முதல்முறையாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “போரில் கொல்லப்பட்ட நமது மாபெரும் தியாகத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், களத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நின்றதன் காரணமாகவும் ஈரான் விரும்பிய கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இன்றில் இருந்து, நாம் தொடர்ந்து ஒன்றிணைந்தே இருப்போம். அது ராஜதந்திர துறையாக இருந்தாம் சரி, தற்காப்புத் துறையாக இருந்தாம் சரி, வீதிகளில் நடைபெறும் போராட்டக்களமாக இருந்தாலும் சரி, சேவை வழங்கும் தளமாக இருந்தாலும் சரி அனைத்திலும் நாம் ஒன்றிணைந்தே இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.










