கட்டுரையாளர் – சிரேஷ்ட ஊடகவியலாளர் அழகன் கனகராஜ்
மணி இரவு 8:30 ஐத் தாண்டியிருந்தது. புதன்கிழமை (செப்டம்பர் 16) நள்ளிரவை நெருங்கும் அந்த நேரத்தில், மட்டக்குளியப் பகுதியின் அளுத்மாவத்தை வீதியில் மெல்லியதாய் ஒரு தூறல் காற்று வீசிக்கொண்டிருந்தது. வத்தளைத் திசையிலிருந்து கொட்டாஞ்சேனை திசையை நோக்கிச் செல்லும் அந்தப் பிரதான வீதி, வழக்கத்தை விடச் சற்று மந்தமான சனநடமாட்டத்துடன் காணப்பட்டது. ஆனால், அந்த அமைதி சில நொடிகளில் சுக்குநூறாக உடையும் என்று அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.
மரணத்தின் கோரத்தாண்டவம் அரங்கேறிய கணம்
மட்டக்குளிய பேர்குசன் வீதியிலிருந்து முகத்துவாரம் பக்கமாகச் செல்லும் வழியில் அமைந்துள்ள கந்தஉட சந்தி, எப்போதும் பரபரப்பாக இயங்கும் ஒரு பகுதி. கொட்டாஞ்சேனைப் பக்கத்திலிருந்து மட்டக்குளிய திசையை நோக்கிப் பயணித்த இரண்டு முச்சக்கர வண்டிகள், அந்தச் சந்தியில் ஒரே தடவையில் பக்கவாட்டிற்குத் திரும்பின. அதேபோல், பேர்குசன் வீதியிலிருந்து வந்ததாகக் கூறப்படும் ஸ்கூட்டி வண்டியும் அதே திசை நோக்கித் திரும்பியிருந்தது. அங்கே வாகனங்கள் திரும்புவதற்கான முறையான வீதிச் சமிக்ஞைகளும் இருந்தன.
அதேவேளை, மட்டக்குளியப் பக்கத்திலிருந்து காதை கிழிக்கும் சத்தத்துடன் அதிவேகமாக சீறிப்பாய்ந்து வந்தது அந்த BYD ரக கார். ஓட்டுநரின் முழுமையான கட்டுப்பாட்டை இழந்த அந்தச் சொகுசு வாகனம், கண் இமைக்கும் நேரத்தில் அந்த இரண்டு முச்சக்கர வண்டிகளையும், அந்த ஸ்கூட்டியையும் கோரமாக மோதித் தள்ளியது. “கீச்…” என்ற பயங்கர அலறல் சத்தத்துடன் வீதியைக் கிழித்துக்கொண்டு சென்றது. சுமார் 200 மீற்றர் தூரத்திற்குத் தீப்பொறிகள் பறக்க அதிவேகமாகப் பயணித்த அந்த கார், முன்பாகச் சென்ற மற்றுமொரு முச்சக்கர வண்டியையும் மூன்று மோட்டார் சைக்கிள்களையும் பந்தாடிவிட்டு நின்றது.
சுக்குநூறாய் உடைந்துபோன மனித உயிர்கள்
அந்தக் கார் உரசிச் சென்ற வேகத்தில் வீதியில் தீப்பொறிகள் கொழுந்துவிட்டுத்தெழுந்தன. விபத்தில் சிக்குண்ட முச்சக்கர வண்டிகள் சில, யாரோ கசக்கியெறிந்த காகிதக் குப்பைகளைப் போல உருமாறிப் போயிருந்தன. ஸ்கூட்டியின் முன்பக்கச் சக்கரம் கழன்று வீதியில் கிடக்க, அந்த ஸ்கூட்டியோ இரண்டாகப் பிளந்து கிடந்தது. ஒரு கணத்தில் அந்தச் சந்தி முழுவதுமே இரத்த வெள்ளக் காடாக மாறியது.
அந்தக் கோர விபத்தில் சிக்கிய ஸ்கூட்டியில் பயணித்த தம்பதியினர், மேலதிக வகுப்புகள் முடித்துக்கொண்டு வரும் தங்களது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வருவதற்காகவே அந்த வழியாக வந்துகொண்டிருந்தனர். ஸ்கூட்டியைச் செலுத்தி வந்த கணவனின் கால் முறிந்து, தலையிலிருந்து கொப்புளித்து வந்த இரத்த வெள்ளத்தில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்திருந்தார். அவருடன் வந்த மனைவியோ பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடியபடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அலறலும் அதிர்ச்சியும் நிறைந்த நள்ளிரவுச் சூழல்
அங்கு உடனடியாக ஒன்றுகூடிய கனிவுகொண்ட மனிதர்கள், காயமடைந்தவர்களைத் தாங்கிப் பிடித்தார்கள்; அவ்வழியாக வந்த ஆட்டோக்களிலும் ஏனைய வாகனங்களிலும் அவர்களைத் தூக்கிச் செருகி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களைத் தூக்கிய அந்த நல்லுள்ளங்களின் ஆடைகள் முழுவதும் அவர்களின் இரத்தத்தால் நனைந்துபோயிருந்தன. விபத்தின் கோரத்தை கண்ட பல பெண்களும் இளம் யுவதிகளூம் தங்களின் சோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுதனர்.
அருகிலுள்ள அங்காடிகளிலும் கடைகளிலும் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தவர்கள், அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு விபத்து நடந்த வீதியை நோக்கி ஓடோடி வந்தனர். ஆனால் எவ்வித மனச்சாட்சியும் இன்றி, எங்குமே எதுவும் நடக்காதது போலத் தங்களது வியாபாரத்தில் மட்டும் குறியாக இருந்த சில வியாபாரிகளையும் அங்கு காண முடிந்தது. அருகில் நின்று உணவு உண்டவர்களும், மது அருந்தியவர்களும் கூடத் தங்களது தட்டுகளையும் கோப்பைகளையும் அப்படியே மேசைகளில் போட்டுவிட்டு அந்தத் தலத்திற்கு ஓடிவந்தனர்.
மரண ஓலங்களும்: வெட்கக்கேடான திருட்டுத்தனங்கள்
இந்த விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியும் சோகமும் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கி எடுத்திருந்த வேளையில், அங்கே மனிதநேயம் முழுமையாகச் செத்துப்போன மற்றொரு கோர முகமும் வெளிப்பட்டது. விபத்து இடம்பெற்றதை அடுத்து, இரத்தம் தோய்ந்து கிடந்த அந்த வீதியில் சிதறிக்கிடந்த பெறுமதியான பொருட்கள் பலவற்றைக் கண்ட மக்கள், அவற்றை யாருடையது என்று கூடப் பார்க்காமல் “தங்களுடையவை” என்று கூறிச் சுவீகரிக்கத் தொடங்கினர்.
விபத்து குறித்த செய்தி பரவியதும், அதனைப் பார்ப்பதற்காகவும் வாகனங்களில் வந்து வாகனங்களை வீதியோரங்களில் நிறுத்திவிட்டு ஓடிவந்தனர். அங்கிருந்த சிலர் அந்த வாகனத்தில் ஏதாவது பெறுமதியான பொருட்கள் தங்களுக்கு கிடைக்காதா? என்று உற்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். மனித உயிர்கள் துடிதுடித்துக்கொண்டிருந்த அந்தத் துயரத்திலும், சுயநலத்துடன் பொருட்கள் மீது கைவைத்த இத்தகைய செயல்கள் அங்கிருந்த நல்லுள்ளங்களை மேலும் வேதனைக்குள்ளாக்கின.
அதேபோல், மனிதநேயமற்ற மற்றொரு செயலாக, விபத்தில் உயிருக்குப் போராடிய மனிதர்களின் அவல நிலையைச் செல்போன்களில் வீடியோ எடுத்த சிலர், அதைத் தங்களது நண்பர்களுக்குப் பகிர்ந்ததோடு, சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுத் தங்களின் மலிவான விளம்பரத் தேடலை அரங்கேற்றினர்.
மருத்துவமனையும் அதிர்ச்சித் தகவல்களும்
இறுதியில், இந்தக் கோர விபத்தில் மொத்தமாக 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சிய 10 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுப் போராடி வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் மட்டக்குளிய பகுதிகளைச் சேர்ந்த 44 மற்றும் 64 வயதுடையவர்கள் ஆவர். இந்த விபத்திற்குக் காரணமான 52 வயதுடைய மட்டக்குளியப் பகுதியைச் சேர்ந்த காரின் ஓட்டுநர் உடனடியாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், அந்தச் சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதியானதாகத் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கேள்விக்குள்ளாகும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பாதைகள்
விபத்து நடந்த அந்தச் சந்தியின் அமைப்பைப் பார்த்தால் நெஞ்சம் பதைபதைக்கிறது. முகத்துவாரம் பக்கத்தில் அரச வங்கியும், சைவ உணவகமும் அமைந்துள்ளன. அந்த வங்கிக்கு எதிரில் சில்லறைக் கடைகள் உள்ளன. கங்காராமையிலிருந்து மட்டக்குளிய நோக்கிச் செல்லும் 145 இலக்கப் பேருந்து, அந்தச் சைவ உணவகத்திற்கு முன்பாகவே நிறுத்தப்படும். அதில் வந்து இறங்கி பேர்குசன் வீதிக்குச் செல்ல வேண்டும் என்றால், பயணிகள் இந்த விபத்து நடந்த துயர இடத்தில்தான் சாலையைக் கடந்தாக வேண்டும். ஆனால், அங்கே மக்களைப் பாதுகாப்பாகக் கடந்து செல்வதற்கான முறையான வீதிக் கடவைகள் எவையும் கிடையாது.
பேர்குசன் வீதிக்குச் செல்லும் நுழைவு வாயிலில் ஒரு ரெஸ்டூரண்டும், அளுத்மாவத்தையில் ஓர் அங்காடிக் தொகுதியும் இருப்பதால், எப்போதும் மக்கள் நடமாட்டம் களைகட்டியிருக்கும் ஒரு பகுதியாகும் இது. அத்தகைய அபாயகரமான சந்திப் பகுதியில்தான் இந்த விபத்து அரங்கேந்துள்ளது.
மறுநாள் காலை… எஞ்சியிருக்கும் தழும்புகள்
விபத்து நடந்த சில நிமிடங்களில் போக்குவரத்துப் பொலிஸார் விரைந்து வந்து அப்பகுதியின் நெரிசலைச் சீர்செய்தனர். மறுநாள் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) காலை வேளையில், போக்குவரத்துப் பொலிஸ் உயர் அதிகாரிகள் அந்த இடத்திற்கு நேரில் வருகை தந்து, அருகில் உள்ள கட்டடங்களில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதனைப் பார்வையிட்டுச் சென்றனர்.
சூரிய வெளிச்சம் வந்ததும் பார்க்கும்போது, புதன்கிழமை (16) இரவு அங்கு நடமாடிய கோரத்தாண்டவத்தின் தடங்கள் சற்றே துடைக்கப்பட்டிருந்தனர். சுக்குநூறாக உடைந்து கிடந்த வாகனங்களின் உதிரிபாகங்கள், கண்ணாடிக் துகள்கள் மற்றும் இரத்தம் தோய்ந்து கிடந்த அந்தச் சாலை இப்போது சுத்தமாக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த அந்தச் சபிக்கப்பட்ட சந்தி, இன்னும் அந்தப் பகுதி மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களையும் தீராத அச்சத்தையும் மட்டும் அப்படியே சுமந்துநிற்கிறது.
நன்றி – தமிழ்மிரர்
