ஒருபுறம் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு; மறுபுறம் மதத் தலைவர்கள் அரசால் அவமதிப்பு

நாட்டில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து வரும் நிலையில், அரசு மதத் தலைவர்களை அவமதிப்பதிலும் சமூகப் பிளவுகளை ஏற்படுத்துவதிலும் குறியாக இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

குப்பியாவத்தை மேற்கு பிரதேசத்தில் நேற்று 700 மாணவர்களுக்குப் பாடசாலைப் பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:-

“வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்த அமைச்சர்கள், இன்று மதத் தலைவர்களை விலங்குகளின் பெயர்களால் அழைத்து இழிவுபடுத்துகின்றனர். புத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசமைப்பின் கடமை என்றாலும், இன்று அமைச்சர்களே மகா சங்கத்தினரையும், அருட்தந்தையர்களையும் ‘கேடுகெட்டவர்கள்’ எனச் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தாக்கி வருகின்றனர்.

மதமற்ற கொள்கையைப் பிறர் மீது திணிக்கும் இத்தகைய கீழ்த்தரமான சேறு பூசும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.” – என்றார்.

ஆடைத் தொழிற்சாலைகள் மூடல் மற்றும் வேலையிழப்பு
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்துப் பேசிய அவர்,

“ஆடைத் தொழிற்சாலைகள் முடக்கம்: ரணசிங்க பிரேமதாஸவினால் உருவாக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைத் திட்டங்கள் இன்று மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

பாரிய ஆடை உற்பத்தி நிறுவனமான MAS Holding இல் பணியாற்றும் 96 ஆயிரம் பேரில், சுமார் 26 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊழியர் எண்ணிக்கையை 70 ஆயிரமாகக் குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க வரிக் குறைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளைச் சரியாக முன்னெடுக்க இந்த அரசால் முடியாமல் போனதே இந்த வீழ்ச்சிக்குக் காரணம். தொழிற்சாலைகளைத் திறந்த அனுபவம் இல்லாதவர்கள், இன்று அவற்றை மூடிவிட்டுத் தொழிலாளர்களை வீதிக்கு இறக்கியுள்ளனர்.

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால், நாடாளுமன்றத்தில் அது குறித்துப் பேசினால், தட்டுப்பாடு இல்லையென அரசு அப்பட்டமாகப் பொய் கூறி வருகின்றது. இது அரசின் அகம்பாவத்தையும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத இயலாமையையுமே காட்டுகின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles