மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் மூன்று செயல் திட்டங்கள் பதுளையில் முன்னெடுப்பு!

 

மலையக கல்வி அபிவிருத்தி மன்றம், பதுளை மாவட்டத்தில் வாழும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் நோக்கில் மூன்று முக்கிய செயல் திட்டங்களை நேற்று (22) முன்னெடுத்தது.

கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் பிரம்டன் தமிழ் ஒன்றியம் மற்றும் கொழும்பை மையமாகக் கொண்ட மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் ஆகியவற்றின் பூரண அனுசரணையில், டித்வா புயல் தாக்கத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேசத்திற்குட்பட்ட யூரி தோட்டம் மற்றும் லுணுகல பிரதேசத்திற்குட்பட்ட மடுல்சீமை, கல்லுள்ள, டூமோ தோட்டப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எரிவாயு அடுப்புகள், மின்சார கேத்தல்கள், சமையல் பாத்திரங்கள், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், ஹொப்டன் – கெஹெல்வத்தை தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளின் கலை, கலாசாரம் மற்றும் வாசிப்புத் திறன்களை ஊக்குவிக்கும் முகமாக ஸ்ரீ மணி வாசகர் மண்டபத்திற்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

அத்துடன், லுணுகலை சுவிண்டன் தமிழ் வித்தியாலயத்திற்கு தேவையான காரியாலய ஒழுங்கமைப்பு உபகரணங்களும் மன்றத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்த மூன்று செயல் திட்டங்களும் மலையகப் பகுதிகளில் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊக்கமாக அமைந்தன.

இந்நிகழ்வில் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பணிப்பாளர் கே. சிவசுப்பிரமணியம், தலைவர் ஏ. சிவஞானம், கருத்தரங்கு பரீட்சைகள் பொறுப்பாளர் வி.பி. ஏகாம்பரம், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஹேரோஷன் குமார், நிர்வாக உறுப்பினர் பிரதீபன் உள்ளிட்டோர் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, உயரிய சேவைகளை முன்னெடுத்துவரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தினரை பிரதேச மக்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

– நடராஜா மலர்வேந்தன்
பசறை நிருபர்

Related Articles

Latest Articles