தென் மாகாணம், மாத்தறை மாவட்டத்தின் புகழ்பெற்ற தேவேந்திரமுனை (தெவிநுவர) ஸ்ரீ உத்பலவர்ண விஷ்ணு மகா தேவாலயத்தில் எசல மஹா பெரஹெர உற்வசத்தில், எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவிருந்த காவடி நடன ஊர்வலத்தை நிறுத்துமாறு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
புலனாய்வுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் மாத்தறை மாவட்டச் செயலாளருக்கு இந்தச் சிபாரிசு முன்வைக்கப்பட்டுள்ளது.
தேவேந்திரமுனை தேவாலயத்தின் வருடாந்த எசல மஹா பெரஹெர உற்சவம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள ரந்தோலி பெரஹர ஊர்வலத்துடன் விழா நிறைவடையும். இந்நிலையில், 28 ஆம் திகதி இடம்பெறவிருந்த காவடி பெரஹரவையே ரத்து செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்படி தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேவுக்கு (முதன்மைப் அறங்காவலர்), பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கஞ்சிபானி இம்ரான்’ என்பவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான குரல் பதிவுகளும் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, தேவேந்திரமுனை எசல பெரஹர நிகழ்வுகளுக்கு பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை உள்ளடக்கிய தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுத் தலைவர், தேசிய புலனாய்வுச் சேவை (NID) மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கைகளின்படி, காவடி ஊர்வல ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நடனக் கலைஞர்களுக்கும் இடையே முரண்பாடான சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றும், அதனைப் பயன்படுத்தி அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையிலேயே காவடி ஊர்வலத்தை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










