ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற அனுமதிக்கப் போவதில்லை என்று உறுதியளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டைப் பொருளாதார ரீதியில் முற்றிலும் தனிமைப்படுத்துமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஈரான் குறித்துத் தொடர்ந்து பேசிய ட்ரம்ப், “ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் அச்சுறுத்தலாக ஈரான் திகழ்ந்தது. ஆனால், இனி அவர்கள் அவ்வாறு இருக்க முடியாது.
வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வரையிலும், அணுஆயுத ஆசைகளைக் கைவிடும் வரையிலும், பயங்கரவாதத்திற்கான ஆதரவை நிறுத்தும் வரையிலும் ஈரானை முழுமையான பொருளாதாரத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த எம்மோடு இணையுமாறு அனைத்து நாடுகளுக்கும் நான் கோரிக்கை விடுக்கின்றேன்” என்று தெரிவித்தார்.
அமெரிக்கப் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போர், அதனால் ஏற்பட்டுள்ள பிராந்திய ஸ்திரமற்ற தன்மை மற்றும் அணுஆயுத அச்சுறுத்தல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கவலை வெளியிட்டு வரும் நிலையிலேயே ட்ரம்பின் உரை வெளியாகியுள்ளது.
இதேவேளை, ட்ரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில், ஐ.நா. தலைமையகத்திற்கு வெளியே திரண்ட ஈரானிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள், ஈரானில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் சர்வாதிகாரத்தைக் கண்டித்தும் சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
