10 நாட்களாக தொடரும் தாக்குதல்: ட்ரம்பின் இறுதி இலக்கு என்ன?

ஈரான் மீது அமெரிக்கா கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களின் இறுதி இலக்கு என்ன என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுவரை தெளிவுபடுத்தவில்லை.

போர்நிறுத்த உடன்படிக்கைக்கு மீண்டும் திரும்புவதே அமெரிக்காவின் நோக்கமாகக் கருதப்பட்டாலும், தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பான திட்டங்களும் டிரம்பிடம் உள்ளதாகவும், அதுகுறித்த முடிவையே அவர் தற்போது பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது.

ஈரானின் புரட்சிகர காவல் படை மற்றும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தைக் இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தும் அவர்களின் இராணுவக் கட்டமைப்புகளை அமெரிக்கா தொடர்ந்து தாக்கி வருகிறது.

இருப்பினும், இந்த மோதல் ஒரு முட்டுக்கட்டையான (Stalemate) நிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க மக்கள் கருதுகின்றனர்.

அதேவேளை, ஈரானின் பொதுக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கினால், அது ஈரானிய மக்களுக்கு எதிரான தாக்குதலாகவே பார்க்கப்படும் என்ற உணர்வும் எழுந்துள்ளது.

இருப்பினும், ஈரானில் உள்நாட்டு ஆட்சி மாற்றம் (Regime change) ஏற்படும் என்ற மெல்லிய நம்பிக்கையை அமெரிக்கா இன்னமும் கைவிடவில்லை.

அமெரிக்க வீரா்கள் கொல்லப்பட்டதற்கு ஈரானியர்கள் “கடுமையான விலையைச் செலுத்த நேரிடும்” என்று எச்சரித்ததைத் தவிர, இந்த புதிய தாக்குதல்கள் குறித்து டிரம்ப் பெரிய அளவில் விளக்கம் எதையும் அளிக்கவில்லை. கடந்த வார இறுதியில் நடைபெற்ற தாக்குதலில் அமெரிக்கச் படைவீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட படைவீரர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, டெலாவேரில் உள்ள ‘டோவர்’ விமானப்படை தளத்திற்கு செவ்வாய்க்கிழமை மாலை அதிபர் டிரம்ப் செல்லவிருந்தார். எனினும், அந்த நிகழ்வு தற்போது வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles