நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் பணிப்புரைகளை மீறி, குறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை, பொருட்களில் குறிக்கப்பட்டிருந்த அசல் விலையை அகற்றி மாற்றியமைத்தமை மற்றும் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்திருந்தமை தொடர்பில் J.K. Marketing Services (Pvt) Ltd நிறுவனத்தின் கீழ் இயங்கும் இரண்டு கீல்ஸ் சுப்பர் கிளைகளுக்கு எதிராக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் களுத்துறை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
பண்டாரகம, பாணந்துறை வீதியில் அமைந்துள்ள கீல்ஸ் சுப்பர் கிளையில் 2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, 10 முட்டைகள் கொண்ட பொதியில் அதிகபட்ச சில்லறை விலை ரூ.590/- எனக் குறிக்கப்பட்டிருந்த போதிலும் அது ரூ.615/-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இந்த வழக்கு 2026 செப்டம்பர் 03 ஆம் திகதி பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி நிறுவனம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ரூ.200,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
மத்துகம கீல்ஸ் சுப்பர் கிளையில் 2026 ஆகஸ்ட் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, ஏற்கனவே குறிக்கப்பட்டிருந்த அசல் விலை அகற்றப்பட்டு மாற்றப்பட்ட 100 கிராம் Sweet Potato Chips பொதிகள் 05 விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
பணிப்புரை இலக்கம் 85 மற்றும் சட்டத்தின் பிரிவு 10(4)ஐ மீறியமை தொடர்பான இந்த வழக்கு 2026 செப்டம்பர் 14 ஆம் திகதி பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ரூ.200,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
⚖️ இதன்படி, 2026 செப்டம்பர் 03 மற்றும் 2026 செப்டம்பர் 14 ஆகிய இரு தனித்தனி திகதிகளில் முடிவடைந்த வழக்குகளில் தலா ரூ.200,000/- வீதம் விதிக்கப்பட்ட அபராதங்களின் மொத்தம் ரூ.400,000/- ஆகும்.
👥 நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு: சுப்பர் மார்க்கெட் அல்லது ஏனைய வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும்போது பொதியில் குறிக்கப்பட்ட விலையை பற்றுச்சீட்டில்
அறவிடப்பட்ட விலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அசல் விலை அழிக்கப்பட்டுள்ளதா அல்லது மாற்றப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்கவும். உணவு மற்றும் பானங்களை வாங்கும்போது காலாவதி திகதியை கட்டாயமாகச் சரிபார்க்கவும். கொள்வனவுக்குப் பின்னர் பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு அறவிடப்பட்ட விலைகளையும் சரிபார்க்கவும்.
📞 இவ்வாறான சந்தை முறைகேடுகள் தொடர்பான தகவல்களை அலுவலக நேரங்களில் 1977 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்கவும்.










