ஒரே இலக்க தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகளை, நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி, அவற்றின் உரிமையாளர்கள் எனக் கூறப்படும் நபர்களையும் கைது செய்துள்ளனர்.
மேற்படி முச்சக்கர வண்டிகள் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ராகலை மற்றும் சாந்திபுரப் பகுதிகளில் இருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக சாந்திபுரப் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட முச்சக்கர வண்டி, வாடகைக்குப் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றொரு முச்சக்கர வண்டி ராகலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இரு முச்சக்கர வண்டிகளையும் பறிமுதல் செய்த நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், சந்தேக நபர்கள் இருவரும் உறவினர்கள் என தெரிவித்தனர்.
இரு முச்சக்கர வண்டிகளிலும் ஒரே இலக்க தகடுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக, நுவரெலியா மாவட்ட பிரதி காவல்துறைத் தலைவர் ஜகத் சந்திரகுமார மற்றும் நுவரெலியா சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகர பண்டார ஆகியோரின் அறிவுறுத்தல்களின்படி, அந்த இரு வண்டிகளின் சேசிஸ் எண் மற்றும் எஞ்சின் எண்களை சரிபார்க்க நுவரெலியா மாவட்ட பிரதம மோட்டார் வாகன ஆய்வாளரின் உதவியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.பி. கொஹோல்தெனியா தெரிவித்தார்.
விசாரணைகளில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் கடந்த காலங்களில் பல நபர்களுக்கு சொந்தமாகி இருந்தமை தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் ஏதேனும் சட்டவிரோதச் செயல்களுக்காக இவை பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.










