பசறை, அம்முனிவத்தை பகுதியில் 89,000 ரூபா பெறுமதியான 141 கிலோ ஒட்டுப்பாலைத் (ரப்பர் மரத்திலிருந்து பெறப்படும் திரவப் பால் ) திருடியதாகக் சந்தேகிக்கப்படும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 28 மற்றும் 33 வயதுடைய பசறை அமுனிவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
டெமேரியா தோட்டத்திற்குச் சொந்தமான களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த ஒட்டுப்பால் தொகையொன்று காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ரத்னசிறி பண்டாரவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.










