தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைத்துள்ள நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட 22 உறுப்பினர்களினதும் ஆதரவுடன் இன்று (13) நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் உறுப்பினர்களிடையே கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதால் சபையில் பரபரப்பான சூழல் நிலவியது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபைத் தலைவர் வேலு யோகராஜ் தலைமையில் இன்று நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது, ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 22 உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து அது சபையில் நிறைவேற்றப்பட்டது.
சபையில் ஆட்சியில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி (06) மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுடன், (06) ஐக்கிய மக்கள் சக்தியைப் (05) பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, (01) ஐக்கிய தேசியக் கட்சி (01) மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி ஒரு உறுப்பினர் சுயாதீன குழு சார்பாக இரு உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தது.
தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு உறுப்பினர்களில் ஆறு பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், அந்தக் கட்சியின் உறுப்பினரான ரஞ்சன் அஜித் குமாரநாயக்க கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
அதேவேளை, மக்கள் போராட்டக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பத்மசிறியும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
34 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தித் திட்டங்கள்
வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த சபைத் தலைவர் வேலு யோகராஜ், சுமார் 34 கோடி ரூபாய் செலவில் எதிர்வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டைப் போன்றே எதிர்வரும் ஆண்டிலும் பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி முற்போக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் அதிகாரிகளும் இணைந்து செயற்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.










