( இரா. சுரேஷ்குமார் – தெமோதரை நிருபர்)
யூரி தோட்ட தொழிலாளர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக யூரி தோட்டப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மக்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டதுடன், இதனால் தோட்டத்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை, ஆலயம் மற்றும் சுற்றுப்பகுதிகளும் சேதமடைந்த நிலையில் உள்ளன.
இருப்பினும், இதுவரை உரிய புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாதுகாப்பான தோட்டக் காணிகளை பாடசாலை அமைப்பதற்காக அரசாங்கத்தின் மூலம் சட்டபூர்வமாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து, தொழிலாளர்கள் இந்தப் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கையில் தொழிலாளர்கள் மற்றும் பிரதேச சமூக பிரதிநிதிகளும் கலந்து கருத்து வெளியிட்டனர். மேலும், யூரி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களும் இதில் பங்கேற்று தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
குறிப்பாக, யூரி தோட்டப் பாடசாலை தற்போது பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், அதனை உடனடியாக புதிய பாதுகாப்பான இடத்தில் நிர்மாணம் செய்வதற்கான நிலம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், அரசாங்கம் நேரடியாக தலையிட்டு, இப் பாடசாலையை விரைவாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.










